Advertisment

நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி; தமிழகத்திற்கு எத்தனை?

113 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி; தமிழகத்தில் எத்தனை கல்லூரிகள், எங்கு தொடங்கப்பட உள்ளன?

author-image
WebDesk
New Update
MBBS

இந்தியாவில் புதிதாக 113 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.

Advertisment

நாடு முழுவதும் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். அதன்படி அதற்கான விண்ணப்பங்கள் நாடு முழுவதும் இருந்து பெறப்பட்டன.

மொத்தம் 170க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து விண்ணப்பங்கள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 113 விண்ணப்பங்கள் புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், 58 விண்ணப்பங்கள் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் புதிதாக 22 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிரா – 14, ராஜஸ்தான் – 12, தெலங்கானா – 11, மேற்கு வங்கம் – 8, மத்தியப் பிரதேசம் – 7, ஆந்திரா – 7, கர்நாடகா – 5, தமிழ்நாடு – 5 என்ற அளவில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் உத்தரகண்ட் மாநிலத்துக்கு 3 புதிய மருத்துவக் கல்லூரிகளும், கேரளா, ஒடிசா, குஜராத் மாநிலங்களில் தலா 2 மருத்துவக் கல்லூரிகளும், ஹரியானா, டெல்லி, அசாம், பஞ்சாப், சிக்கிம், திரிபுரா மாநிலங்களுக்கு தலா ஒரு மருத்துவக் கல்லூரியும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் புதிதாக 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்ட நிலையில், அவற்றை ஆய்வு செய்து, அதன்பேரில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலூரில் அன்னை மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் கிராமத்தில் தக்ஷசீலா மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம் அவனம்பட்டில் ஜே.ஆர். மருத்துவக் கல்லூரி, விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியில் கலசலிங்கம் மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தில் கன்னியாகுமரி மருத்துவ ஆராய்ச்சி மிஷன் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. இந்தக் கல்லூரிகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கான விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் மாற்றியிருக்கிறது. அதன்படி, ஒரு மருத்துவமனையானது, அனைத்துப் பிரிவுகளிலும் சிகிச்சை அளித்து அனைத்துத் துறை மருத்துவர்களையும் கொண்டிருந்தால் முதற்கட்டமாக 50 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையுடன் மருத்துவமனை தொடங்கலாம். அவ்வாறு தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறைந்தது 200 படுக்கை வசதி, 20 தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கை வசதி இருக்க வேண்டும். மேலும், நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் வலியுறுத்தியிருக்கிறது.

நாடு முழுவதும் இதுவரை 706 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தற்போது வழங்கப்பட்டிருக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகளையும் சேர்த்தால் மொத்த எண்ணிக்கை 800க்கு மேல் உயரும். ஆனால், இதில் 50 கல்லூரிகள் தான் அரசு மருத்துவக் கல்லூரிகள். மற்றவை தனியார் மற்றும் சுயநிதி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளாகும்.

கடந்த 2013–14 ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை 51,348 ஆக இருந்த நிலையில், 2023–24 ஆம் ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 1,08,990 ஆக உயர்ந்துள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை 2013–14 ஆம் ஆண்டு 31,185 ஆக இருந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டு முதல் 68,073 ஆக அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mbbs NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment