சென்னையைச் சேர்ந்த ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேசிய மருத்துவ கவுன்சில் (NMC) மீண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேபோல் திருச்சியில் அரசு நடத்தும் கே.ஏ.பி விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்று ஆணையம் கூறியுள்ளது. எனினும் எழுத்துப்பூர்வ உத்தரவுகளுக்காக காத்திருக்கிறோம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 5 ஆண்டுகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் 500 எம்.பி.பி.எஸ் சீட்களுக்கு ஆபத்து நீங்கியது.
அமைச்சர் மேலும் கூறுகையில், இந்தக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் சேர்க்கை வழக்கம் போல் நடத்தப்படும். அரசு மருத்துவக் கல்லூரிகள் குறைந்த கட்டணத்தில் படிப்புகளை வழங்குவது மட்டுமின்றி, மருத்துவப் பொருட்கள் நிறைந்ததாகவும், அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டதாகவும் உள்ளன. அதனால் இந்த கல்லூரிகள் மாணவர்களால் அதிகம் விரும்பபடுகிறது. அதனால் நாங்கள் இந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை இழங்க மாட்டோம் என்றார்.
இதே போல் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுகலை கல்வி நிறுவனத்திற்கும் மருத்துவ கவுன்சில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் அந்த உத்தரவில், ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகைப்பதிவை முறையாக கடைபிடிக்கவும், அனைத்து சிசிடிவி கேமராக்களும் மருத்துவ கவுன்சிலுடன் லைவ்வில் இணைக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது என்று மூத்த மருத்துவர் கூறினார்.
அங்கீகாரம் ரத்து ஏன்?
கடந்த மாதம், தேசிய மருத்துவ கவுன்சிலின் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் (UGMEB) தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரி, புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்தது.
ஆதார் அடிப்படையிலான குறைபாடுகள், ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு மற்றும் சி.சி.டி.வி கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனக் கூறி அங்கீகாரத்தை ரத்து செய்தது. எனினும் தேசிய மருத்துவ கவுன்சிலிடம் மேல்முறையீடு செய்யலாம் என அனுமதி அளித்த நிலையில் குறைபாடுகள் சரி செய்யப்பட்டு தற்போது கவுன்சில் அங்கீகாரம் வழங்கி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“