தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகள் காரணமாக, இந்த ஆண்டு காலதாமதமாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். மாணவர்களின் சேர்க்கை செல்லாததாக மாறியுள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களில் கவுன்சிலிங் செயல்முறையின் தவறான நிர்வாகம் காரணமாக, நாடு முழுவதும் 2,000 க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் இடங்கள் இந்த ஆண்டு வீணாக உள்ளன.
மருத்துவ மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதால் 1,500க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரப்ப முடியாமல் உள்ளன என TOI செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், 600 மாணவர்களின் சேர்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) வழிகாட்டுதல்களால் செல்லாததாகும் ஆபத்தில் உள்ளது. மத்திய அல்லது மாநில ஏஜென்சி மட்டுமே கவுன்சிலிங் நடத்தலாம் என்ற விதிகளை மீறி இந்த மாணவர்களை கல்லூரிகள் சேர்த்துள்ளன. உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நீட்டிக்காத வரை இந்த இடங்கள் அனைத்தும் பாடநெறி காலத்திற்கு காலியாக இருக்கும்.
வியாழக்கிழமை, இளங்கலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநர் சம்பு சரண்குமார் வெளியிட்ட இரண்டு பக்க அறிவிப்பில், செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு மத்திய மற்றும் மாநில கவுன்சிலிங் கமிட்டிகளால் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். 2016 ஆம் ஆண்டில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசு மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு காலக்கெடுவை உச்சநீதிமன்றம் நிர்ணயித்தது. கட்ஆஃப் தேதி அல்லது அதற்கு அப்பால், காலியாக உள்ள இடங்களுக்கு சேர்க்கையை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் 2019 இல் மீண்டும் வலியுறுத்தியது, என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, ஜூலை 27 அன்று கட்ஆஃப் தேதி குறித்து கவுன்சிலிங் கமிட்டிகளை தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்தது. ஆனால், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் வங்காளம் போன்ற மாநிலங்கள் கட்ஆஃப் தேதிக்கு அப்பால் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங்கை நடத்தியதாக இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் 350க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான சேர்க்கை செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு நடந்தது. ”மத்திய அரசின் நுழைவுத்தேர்வு ஆணையமான சென்டாக், இந்த பொது அறிவிப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என்று கூறியது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டிற்கு உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 5 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அதனால், சரியான நேரத்தில் சேர்க்கை செயல்முறையை முடிக்க முடியவில்லை," என்று சென்டாக் ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் கூறினார். துணை நிலை ஆளுனர் மற்றும் முதல்வர் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“