தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) ஆய்வில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்களின் வருகைப் பதிவேட்டில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து, 2025-26ம் கல்வி ஆண்டுக்கான MBBS இடங்களுக்கான அங்கீகார புதுப்பித்தல் கேள்விக்குறியாகியுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் 2025-26 ஆம் ஆண்டுக்கான அவற்றின் வருடாந்திர அறிவிப்புகளை தீவிரமாக ஆய்வு செய்த பின்னர், விளக்கம் கேட்டு NMC நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகைப் பதிவு அமைப்பின் (AEBAS) பதிவுகள், அனைத்து கல்லூரிகளிலும் பொதுவான முக்கிய குறைபாட்டை வெளிப்படுத்தியுள்ளன. அதாவது, அனைத்து கல்லூரிகளிலும் பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்களின் வருகை போதுமானதாக இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
வருகைப் பதிவு குறைபாடுகளைத் தொடர்ந்து, NMC மாநில சுகாதாரச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (DMER) டாக்டர் தேரனிராஜன் ஆகியோருடன் நேரில் விசாரணை நடத்தியது. இதன் விளைவாக, NMC இந்த கல்லூரிகளுக்கு நிபந்தனைக்குட்பட்ட MBBS இடங்களுக்கான புதுப்பித்தலை மட்டுமே வழங்கியுள்ளது. 4 மாதங்களுக்குள் வருகைப் பதிவு குறைபாடுகளை சரிசெய்தால் மட்டுமே அங்கீகாரம் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, டாக்டர் தேரனிராஜன் அனைத்து அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளின் டீன்கள் மற்றும் முதல்வர்களுக்கு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தனிநபர், பதவிகள், துறை, ஒட்டுமொத்த வருகையை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்றும், அவசர காலங்கள் தவிர்த்து, விடுப்பு எடுப்பதற்கு முன்பு பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள் குறைந்தபட்சம் 75% வருகையைப் பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். குறைபாடுகள் தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சுற்றறிக்கையில், "டீன்கள் மற்றும் முதல்வர்கள் அனைத்து பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்களின் (தனிநபர், பதவிகள், துறை) வருகை சதவீதத்தை கண்காணிக்க வேண்டும், மேலும் அவசர காலங்கள் தவிர்த்து விடுப்பு வழங்குவதற்கு முன்பு 75% க்கும் அதிகமான வருகையை உறுதிப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகளில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆகியவை அடங்கும்.
AEBAS தரவுகள் அதிர்ச்சியூட்டும் சில விஷயங்களையும் வெளிப்படுத்தியுள்ளன. ஏப்ரல் மாதத்தில், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் 581 மருத்துவர்கள் மொத்தமாக 344 மணிநேரம் மட்டுமே உள்நுழைந்துள்ளனர். இதில் 37 பேர் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவும், 23 பேர் 10 நிமிடங்களுக்கும் குறைவாகவும் உள்நுழைந்துள்ளனர்.
கோவை மருத்துவக் கல்லூரியில் AEBAS தரவுகளின் அடிப்படையில் 20 துறைகளில் 16-ல் குறைபாடுகள் பதிவாகியுள்ளன. கூடுதலாக, இரண்டு துறைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் 13 துறைகளில் முதுநிலை மருத்துவர்கள் பற்றாக்குறையும் கண்டறியப்பட்டுள்ளது. பல கல்லூரி அதிகாரிகள் இந்த பிரச்னையை ஒப்புக்கொண்டனர். கோவை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் நிர்மலா, 75% குறைந்தபட்ச வருகை தேவையை பூர்த்தி செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி கூட்டங்கள் நடத்தியுள்ளதாகவும், NMC ஆல் அடையாளம் காணப்பட்ட காலியிடங்களை நிரப்ப உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். அரசு கல்லூரி ஒன்றின் டீன் ஒருவர், "விளக்கம் ஏற்கனவே NMC-க்கு வழங்கப்பட்டுள்ளது, பிரச்னைகள் விரைவில் சரி செய்யப்படும்" என்று கூறினார்.