/indian-express-tamil/media/media_files/ESijK0iMXQNWc0WbuYeH.jpg)
தேசிய திறனாய்வுத் தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, ஒ.டி.ஆர் எனப்படும் ஒருமுறை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கல்வியில் சிறந்து விளங்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வு (NMMS) நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தேர்வை அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எழுதலாம். தமிழகத்தில் இத்தேர்வை மத்திய அரசு சார்பில் அரசு தேர்வுத் துறை நடத்துகிறது.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான (2025-2026) தேசிய திறனாய்வுத் தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பள்ளிக்கல்வித் துறை, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளின் பள்ளிக்கல்வித் துறைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;
2025-2026-ம் கல்வி ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவு ஜூன் 2 ஆம் தேதி தொடங்கப்பட வேண்டும். தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உதவித்தொகைக்காக ஆன்லைனில் பதிவுசெய்யும்போது ஒ.டி.ஆர் எனப்படும் ஒருமுறை பதிவு அவசியம். இதற்கு மாணவர்களின் செல்போன் எண் தேவை. ஆதார் சார்ந்த இ-கே.ஒய்.சி மேற்கொள்ளப்படும்போது ஓ.டி.ஆர் ஐ.டி வழங்கப்படும்.
இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன. தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு எளிதில் கல்வி உதவித்தொகை கிடைக்கும் வகையில், இதுகுறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.