நீட் பயிற்சி மையங்களில் நிகழ்ந்த மாணவர் தற்கொலைகள் பற்றிய தரவு இல்லை; தேசிய கல்வி கொள்கை 2020 ஆலோசனைக்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது: மத்திய அரசு (பிரதிநிதித்துவ படம்)
நாடு முழுவதும் நீட் (NEET) தேர்வுக்கான பயிற்சி மையங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பயிற்சி மையங்களின் மாணவர்களின் தற்கொலை வழக்குகளின் எண்ணிக்கை பராமரிக்கப்படவில்லை என்று அரசாங்கம் திங்கள்கிழமை தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
Advertisment
டாக்டர் டி.ஆர் பாரிவேந்தர் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு எழுப்பிய கேள்விகளுக்கு சுபாஸ் சர்க்கார் பதிலளித்தார். நீட் மாணவர்களின் தற்கொலை வழக்குகள் குறித்த தரவுகள் மற்றும் மாணவர்களை கட்டாய தற்கொலையில் இருந்து காப்பாற்றுவதற்காக நாடு முழுவதும் பயிற்சி மையங்கள் / நிறுவனங்களை நடத்துவதற்கான நிலையான வழிகாட்டியை வகுக்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா என இரு எம்.பி.க்களும் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினர்.
"கல்வி என்பது பொது பட்டியலில் இருப்பதால், கல்வி நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன. நாட்டில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாநில / யூனியன் பிரதேச அரசாங்கத்தின் வரம்பிற்கு உட்பட்டவை. நாடு முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும், பல்வேறு பயிற்சி மையங்களிலும் மாணவர்களின் தற்கொலை வழக்குகள் பராமரிக்கப்படவில்லை. இருப்பினும், இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் (ADSI), 2021, தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) அறிக்கையின்படி, தொழில்/ வேலை பிரச்சனைகள், தனிமை உணர்வு, துஷ்பிரயோகம், வன்முறை, குடும்பப் பிரச்சனைகள், மனநலக் கோளாறுகள் போன்ற பல்வேறு காரணங்களால் தற்கொலைகள் ஏற்படுகின்றன,” என்று சுபாஸ் சர்கார் கூறினார்.
Advertisment
Advertisements
இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிய சுபாஸ் சர்க்கார், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 இன் படி, ஒவ்வொரு நிறுவனத்திலும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் கையாள உதவும் ஒரு ஆலோசனை அமைப்பு இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும், "விளையாட்டு, கலாச்சாரம்/ கலைக் கழகங்கள், சுற்றுச்சூழல் கிளப்புகள், செயல்பாட்டுக் கழகங்கள், சமூக சேவைத் திட்டங்கள் போன்றவற்றில் மாணவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளையும் இது வழங்குகிறது," என்றும் அவர் கூறினார்.
“மாணவர்களின் கல்வி அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் சக உதவியுடனான கற்றல், பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பக் கல்வியை அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. மனோதர்பன் என பெயரிடப்பட்ட இந்திய அரசின் முன்முயற்சி, கோவிட் பரவிய காலத்திலும் அதற்கு அப்பாலும் மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுக்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உளவியல் ஆதரவை வழங்குவதற்கான பரந்த அளவிலான செயல்பாடுகளை உள்ளடக்கியது. தற்கொலைக்கான சாத்தியமான காரணங்களை நிவர்த்தி செய்வதற்கான தடுப்பு, கண்டறிதல் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய அமைப்பை மேலும் வலுவாக மாற்றுமாறு அமைச்சகம் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது,” என்று சுபாஸ் சர்கார் விளக்கினார்.
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் (HEIs) பயிலரங்குகள் / கருத்தரங்குகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம், யோகா குறித்த வழக்கமான அமர்வுகள், ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் உள்ளிட்ட பாடநெறி நடவடிக்கைகள் மற்றும் பல.