"கோஸ்ட்" பேராசிரியர்கள் என்றால், கல்லூரிகள் மற்றும் பல்கலை.யில் உண்மையாக பணிபுரியாத ஆனால், கணக்குக்காக இருப்பதாக காட்டப்படும் பேராசிரியர்களைக் குறிக்கும். சில கல்வி நிறுவனங்கள் தங்கள் பேராசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அல்லது சில விதிமுறைகளை பூர்த்தி செய்ய போலி பேராசிரியர்களை பதிவு செய்கின்றன. இந்நிலையில், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் "கோஸ்ட்" பேராசிரியர்கள் (ஒரே சமயத்தில் பல நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அல்லது இல்லாதவர்கள்) இருப்பதைத் தடுக்கும் நோக்கில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) ஒரு முக்கிய நடவடிக்கையை எடுக்க உள்ளது. இந்தியாவின் 6.5 லட்சம் ஆசிரியர்களுக்கும் ஆதார் அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று AICTE தலைவர் டி.ஜி. சீதாராம் தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், மத்திய கல்வி அமைச்சகம் புதிய அடையாள அட்டைகள் உருவாக்குவதற்கான அரசிதழ் அறிவிப்பை வெளியிடும் என்று கூறினார். "ஏற்கனவே இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தை (UIDAI) அணுகியுள்ளோம், அவர்கள் எங்கள் திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். இது கோஸ்ட் ஆசிரியர்கள் சிக்கலை நீக்கும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஊழல் எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அம்பலப்படுத்தலுக்குப் பிறகு, அண்ணா பல்கலைக்கழகம் 2024-25ம் ஆண்டிற்கான சுமார் 2,000 ஆசிரியர் பணியிடங்கள் தவறாக நிரப்பப்பட்டதாகக் கண்டறிந்தது. இந்த ஆசிரிய உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பணிபுரிவது கண்டறியப்பட்டது. பொறியியல் இடங்களுக்கான உச்சவரம்பை AICTE நீக்கியுள்ளது, இது பல கல்லூரிகள் புதிய துறைகளில் தங்கள் அனுமதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்தது. உச்சவரம்பை நீக்கியதின் தாக்கம் குறித்து கேட்டபோது, சீதாராம், "நல்ல ஆசிரியர்கள் மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகளைக் கொண்ட நல்ல நிறுவனங்கள் அதிக மாணவர்களைப் பெறுகின்றன" என்று குறிப்பிட்டார்.
பொறியியல் படிப்புகளில் ஆர்வம் அதிகரித்ததற்கு, "முக்கியமாக வேலைவாய்ப்புகளில் ஏற்பட்ட உயர்வால்தான்" என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு கணினி அறிவியல் பொறியியல் படிக்கும் மாணவர்களில் 95% பேர் வேலைவாய்ப்பு பெற்றதாகவும், மற்ற பிரிவுகளில் 65% பேர் வேலை வாய்ப்பு பெற்றதாகவும் கல்லூரிகள் சமர்ப்பித்த தரவுகள் காட்டுகின்றன.
கணினி தொடர்பான படிப்புகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க AICTE பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. அந்த முயற்சிகளை எடுத்துரைத்த சீதாராம், "அடிப்படை பொறியியல் ஆசிரிய உறுப்பினர்களுக்கு புதிய துறைகளில் பயிற்சி அளிப்பதற்காக AICTE முதுகலை சான்றிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்கள் மாற்றப்படவில்லை, ஆனால் ஒரு படிப்பை முடித்த பிறகு மற்றொரு படிப்பை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், வளர்ந்து வரும் துறைகளிலிருந்து தொழில் வல்லுநர்களை ஈர்க்க அசோசியேட் பேராசிரியர்கள் (Associate Professors of Practice) மற்றும் உதவிப் பேராசிரியர்கள் (Assistant Professors of Practice) பணியிடங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். தொழில் வல்லுநர்கள் மூலம் 20% ஆசிரியர் தேவையை இவர்களால் பூர்த்தி செய்ய முடியும்."
பேராசிரியர்களுக்கு 15 ஆண்டுகள் அனுபவம் தேவைப்படும் அதே வேளையில், அசோசியேட் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களுக்கு முறையே 8 மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம் தேவைப்படும், இது கல்லூரிகளுக்கு வளர்ந்து வரும் துறைகளில் இருந்து தொழில் வல்லுநர்களை பணியமர்த்த உதவும்.
மாணவர்களுக்கு தொழில் தொடர்பான தலைப்புகளை கற்பிக்க பாடத்திட்டத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். AICTE, ஐஐடி மற்றும் இந்திய தேசிய பொறியியல் அகாடமியுடன் இணைந்து பொறியியல் ஆசிரிய உறுப்பினர்களின் திறனை மேம்படுத்த "சென்டர் ஃபார் இன்ஜினியரிங் எஜுகேஷன் எக்ஸலன்ஸ்" (Centre for Engineering Education Excellence) என்ற மையத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. "அடுத்த 3 ஆண்டுகளில் 2 மற்றும் 3-ம் அடுக்கு கல்லூரிகளில் இருந்து 4,000 பொறியியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்," என்று சீதாராம் கூறினார்.