தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்) முடிவுகளை அக்டோபர் 16ம் தேதியான இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடுவதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தது.
இந்த தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான ntaneet.nic.in என்ற இணைய முகவரியில் வெளியிடப்படம் .
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக செப்டம்பர் 13-ம் தேதியன்று நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதன்மூலம், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் உள்ள மாணவர்கள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு , வரும் அக்டோபர் 14 ஆம் தேதி சிறப்பு நீட் தேர்வு நடைபெறும்.
நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள 542 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 80,055 இடங்கள், 313 பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 26,949 இடங்கள் நிரப்பப்படுகின்றன.
நீட் தீர்வு முடிவைப் பதிவிறக்கம் செய்ய, மாணவர்கள் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட வேண்டும்.
நீட் கலந்தாய்வு:
அரசு கல்லூரிகளில் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களுக்கான சேர்க்கைக்கு மருத்துவ ஆலோசனைக் குழு (எம்.சி.சி) நீட் கலந்தாய்வை நடத்துகிறது. மருத்துவ கல்லூரிகளில் மீதமுள்ள 85 சதவீத இடங்களை (அரசு + தனியார் கல்லூரிகள்) அந்தந்த மாநில அரசுகள் நிரப்புகின்றன. இதற்கான, கலந்தாய்வு அந்தந்த மாநில அமைப்பால் மேற்கொள்ளப்படுகிறது.
நீட் தேர்வு முடிவை எப்படி பார்ப்பது ?
ஸ்டேப் 1: ntaneet.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.
ஸ்டேப் 2: நீட் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் பாஸ்வோர்டை செலுத்த வேண்டும்
ஸ்டேப் 3 : 2020 நீட் தேர்வை சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம்.
கோவிட் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, தேர்வு மையங்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 3,843-ஆக அதிகரிக்கப்பட்டதுடன், ஒரு அறைக்கு 12 பேர் வீதமும், ஒரு மேசைக்கு ஒருவர் என்ற அடிப்படையிலும், தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.
7.5 சதவீத இட ஒதுக்கீடு: தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,250 இடங்கள் உட்பட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில், இந்த ஆண்டு முதல், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.