இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பல்வேறு தேர்வுகளை கல்வி நிறுவனங்கள் ஒத்திவைத்துள்ளன. இந்த நிலையில், தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ), 2021 மே மாதத்திற்கான ஜே.இ.இ மெயின் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. ஜே.இ.இ மெயின் தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்படவிருந்தது, ஆனால் இப்போது அந்த அறிவிப்பு செயல்முறை நிறுத்தப்பட்டுள்ளது.
மே மாத ஜே.இ.இ மெயின் தேர்வுகள் மே 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்திற்கான ஜே.இ.இ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது மே மாதத்திற்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால்‘ நிஷாங்க் தனது டுவிட்டர் பக்கத்தில், "COVID-19 இன் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, JEE (முதன்மை) - மே 2021 அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அடுத்தக் கட்ட தகவல்களை தெரிந்துக் கொள்ள மாணவர்கள் என்.டி.ஏ-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள், ”என்று ’ட்வீட் செய்துள்ளார்.
என்.டி.ஏ இதற்கு முன்னர் ஏப்ரல் மாதத்திற்கான ஜே.இ.இ மெயினை ஒத்திவைத்தது. இப்போது, ஏப்ரல் மற்றும் மே அமர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், இரு அமர்வுகளும் பின்னர் அடுத்தடுத்து நடைபெறும் எனவும் தேர்வு முகமை தெரிவித்துள்ளது. புதிய தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
JEE Main 2021 இன் இரண்டு அமர்வுகள் ஏற்கனவே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட்டன, இதில் ஜனவரி அமர்வில் 620978 மாணவர்களும், பிப்ரவரி அமர்வில் 556248 மாணவர்களும் கலந்துக் கொண்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil