பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு (UGC-NET) என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தத் தேர்வுகள் ஆண்டிற்கு இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது.
அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் டிசம்பர் 11-ம் தேதி வரை பெறப்பட்டது. இதற்கான தேர்வுகள் ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 16 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2025 ஜனவரியில் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை 14 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. அதில் ஜனவரி 15 (திருவள்ளுவர் தினம் (மாட்டுப் பொங்கல்) மற்றும் ஜனவரி 16 (உழவர் திருநாள் (காணும் பொங்கல்) கொண்டாடப்படும் தினங்களில் பல்வேறு பாடங்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டு இருந்தது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறவிருந்த யு.ஜி.சி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 15 ஆம் தேதி சமஸ்கிருதம், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், சட்டம், மலையாளர், உருது, சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட 17 பாடங்களுக்கு யு.ஜி.சி நெட் தேர்வு நடைபெறவிருந்தது.
ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி தேர்வு தேதி அறிவிப்பு
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை அன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 21 ஆம் தேதி மற்றும் ஜனவரி 27 ஆம் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்விற்கான அட்மிட் கார்டு ஏற்கனவே வெளியான நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) https://ugcnet.nta.ac.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொல்லம்.