/indian-express-tamil/media/media_files/2025/10/10/jee-exam-rule-change-2025-10-10-08-05-21.jpg)
2026-27 கல்வியாண்டு முதல், தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) ஒரு அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) 2026-27 கல்வியாண்டு முதல், ஒரு அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளது. ஜே.இ.இ., நீட், சி.யு.இ.டி போன்ற முக்கியத் தேசியத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஒரு முக்கியச் செய்தி, இனிமேல் நீங்கள் விருப்பப்பட்ட தேர்வு மைய நகரத்தை நீங்களே தேர்ந்தெடுக்க முடியாது.
மேலும், உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரி மட்டுமே உங்கள் தேர்வு மையத்தை நிர்ணயிக்கும் சக்திவாய்ந்த காரணியாக இருக்கும்.
விதிகள் மாற்றப்படுவதற்கு காரணம் என்ன?
என்.டி.ஏ-வின் இந்தப் பெரிய மாற்றம், தேர்வு நடைமுறைகளில் ஊடுருவிவிட்ட ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க போடப்பட்ட ஒரு இரும்புத் திரையாகப் பார்க்கப்படுகிறது.
முன்பெல்லாம், நீட், சி.யு.இ.டி விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் பிடித்த மூன்று அல்லது நான்கு நகரங்களை சவுகரியமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால், இனி அந்த வசதி கிடையாது. இந்தக் கடுமையான நடவடிக்கை மூலம், சிறிய கிராமங்கள் அல்லது நகரங்களில் வசிக்கும் தேர்வர்களுக்கு, அவர்களின் ஆதார் முகவரிக்கே அருகில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும். இது வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், தேர்வில் நடக்கும் தில்லுமுல்லுகளை வேரோடு பிடுங்கும் ஒரு முயற்சி!
மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிர்வலைகள்!
இந்த மாற்றம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, படிப்புக்காகத் தங்கள் சொந்த ஊரைவிட்டு வெளியே நகரங்களில் தங்கி இருப்பவர்களுக்குப் பெரும் கவலை.
"ஆதாரில் முகவரி அப்டேட் செய்யவில்லை என்றால், தேர்வு எழுத சொந்த ஊருக்குத்தான் அலைய வேண்டுமா?" "பயணச் சிரமங்கள் கூடுமே!" என்று பலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அதனால், உங்கள் ஆதார் விவரங்களை இப்போதே சரிபார்த்து, புதுப்பிக்க வேண்டியவற்றை முன்கூட்டியே செய்து முடிக்கவும். விண்ணப்பப் படிவம் ஒருமுறை திறக்கப்பட்டால், விவரங்களில் ஒரு அணு அளவு மாற்றம்கூட ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த விதி, ஜனவரி 2026 ஜெயின் மெயின் தேர்வில் முதலாவதாக அமலுக்கு வருகிறது.
தேசியத் தேர்வு முகமை இப்போது ஆவணச் சரிபார்ப்பில் 'ஜீரோ சகிப்புத்தன்மை' கொள்கையைப் பின்பற்றுகிறது. ஆதாரில் உள்ள பெயர், பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்கள், உங்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண் தாளில் உள்ள விவரங்களுடன் துல்லியமாகப் பொருந்த வேண்டும். சிறு எழுத்துப் பிழைகள்கூட உங்கள் விண்ணப்பத்தை ரத்து செய்யப் போதுமானது.
எனவே, ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், உடனடியாக அருகிலுள்ள UIDAI மையத்திற்குச் சென்று சரிசெய்யுங்கள். மேலும், இடஒதுக்கீடு பிரிவுகளைச் எஸ்சி, எஸ்டி, ஓ.பி.சி, இ.டபிள்யூ.எஸ், பி.டபிள்யூ.டி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் பிரிவுச் சான்றிதழ்கள் ஆதார் மற்றும் 10-ம் வகுப்புப் பதிவுகளுடன் ஒத்திசைந்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வ தகவல்படி, ஒரு சிறு முரண்பாடு கூட உங்கள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ அல்லது மொத்த தகுதி நீக்கத்திற்கோ வழிவகுக்கும்.
இந்த புதிய நடவடிக்கை, தேர்வு செயல்முறையை நெறிப்படுத்தவும், நியாயமாக தேர்வு நடக்கவும் தேசியத் தேர்வு எடுத்துள்ள முக்கியமான படி என்றாலும், ஆவணங்களில் உள்ள பிழைகள் பல தேர்வர்களுக்கு தேர்வெழுதும் வாய்ப்பை இழக்கச் செய்யும் சவாலையும் உருவாக்கியுள்ளது. இனி, திறமை மட்டுமல்ல, ஆவணத் துல்லியமும் முக்கியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.