அனைத்து உயர்க் கல்வி நிறுவனங்களும், கல்லூரிகளும் இளங்கலை படிப்புகளில் ஒரு பகுதியாக குறைந்தது ஒரு செமஸ்டர் கால இன்டர்ன்ஷிப்பை வழங்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) கேட்டுக் கொண்டது. பெரும்பாலான தொழில்நுட்ப படிப்புகளில் இன்டர்ன்ஷிப் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், அனைத்து துறைகளிலும் இதை நீட்டிக்க பல்கலைக்கழக மானியம் முடிவெடுத்துள்ளது.
உயர்க் கல்வி நிறுவனங்கள் இன்டர்ன்ஷிப் தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ, எப்ஐசிசிஐ , சி.ஐ.ஐ போன்ற செக்டார் திறன் கவுன்சில்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது . மொத்த மதிப்பெண்களில் இன்டர்ன்ஷிப் குறைந்தது 20 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்தது.
இன்டர்ன்ஷிப் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டர் காலளவு இருக்க வேண்டும். மாணவர்கள் அவர்கள் தேர்வு செய்யும் இன்டர்ன்ஷிபிற்கான மதிப்பெண்களைப் பெறுவார்கள். இது, மாணவர்களின் மொத்த கிரெடிட்டில் சேர்க்கப்படும். முக்கிய பாடங்கள் அல்லது இன்டர்ன்ஷிப் அடிப்படையில் முதுகலை படிப்பை எடுக்க மாணவர்கள் தகுதி பெறுவார்கள் என்றும் யுஜிசி கூறுகிறது.
2020-21 பட்ஜெட் அறிவிப்பின் ஒரு பகுதியாக, இன்டர்ன்ஷிப் அல்லது அப்ரெண்டிஸ்-உட்பொதிக்கப்பட்ட படிப்புகளை வழங்கும் கருத்து முதலில் அறிவிக்கப்பட்டது. இப்போது, அதுகுறித்த விரிவான வழிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பரந்த மக்கள் தொகையை, திறனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கு கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். அதுமட்டுமல்லாமல் கல்வி, வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய அளவில் அமைய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது.