1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை ஜன.4ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள் அதிக அளவில் இருந்தன. குறிப்பாக வட மாவட்டங்களில் அதிக காலியிடங்கள் உள்ளன. இதனையடுத்து, இவற்றை நேரடி நியமனம் மூலம் நிரப்பிக் கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
1500 காலி பணி இடங்கள்
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில், “அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 1,000 காலி பணியிடங்களுடன் 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அனுமதி வழங்கப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவரப்படி 1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2023-24 ஆம் ஆண்டில் 8,643 பணியிடங்கள் கண்டறியப்பட்டன” எனத் தெரிவித்திருந்தார்.
இடைநிலை ஆசிரியருக்கான 1,500 பணியிடங்களை நிரப்பினால் கிடைக்கும் தேர்வர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக இருக்கும் மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிப்பது எப்படி?
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு பிப்.14ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை http://trb.tn.gov.in என்ற இணைய முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“