தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிலையங்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆன்லைன் வழியில் வழங்கும் பிஎச்டி படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது. வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து எட்டெக் நிறுவனங்கள் வழங்கும் ஆன்லைன் பிஎச்டி படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தனியார் கல்வி மற்றும் பயிற்சி நிலையங்கள் வெளிநாட்டு கல்வி நிலையங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆன்லைன் வழியில் பி.எச்.டி பயிலலாம் எனக் கூறும் விளம்பரங்களை கண்டு மாணவர்கள், பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். இந்த விளம்பரங்களால் யாரும் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம்.
ஆன்லைன் வழியில் பி.எச்.டி படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மட்டுமே பி.எச்.டி பயில வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு பி.எச்.டி படிப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், யுஜிசி விதிமுறைகளை பின்பற்றியே பி.எச்.டி படிக்க வேண்டும். பி.எச்.டி படிக்க விரும்பும் மாணவர்கள் கல்லூரி அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களில் சேர்வதற்கு முன் யுஜிசி விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என ஆராய்ந்து சேர வேண்டும்" என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், எட்டெக் நிறுவனங்கள் வழங்கும் ஆன்லைன் படிப்புகளுக்கு பதிவு செய்யும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது. எட்டெக் நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை வெளியிடுவதற்கு மத்திய கல்வி அமைச்சகம் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil