வெளிநாட்டில் மருத்துவ பட்டம் பெற்றவர்கள், இந்தியாவில் உரிமம் பெறுவதற்காக, ஜூலை 2023 இல் நடந்த வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் (FMGE) 24,269 மாணவர்களில் 2,474 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சர்வதேசப் பல்கலைக் கழகங்களில் மருத்துவப் பட்டம் பெற்ற இந்திய மாணவர்களுக்கான ஸ்கிரீனிங் சோதனையாகச் செயல்படும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வு (FMGE) ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கவும், பின்னர் இந்தியாவில் மருத்துவம் பயிற்சி செய்யவும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதையும் படியுங்கள்: எம்.பி.பி.எஸ் கவுன்சலிங் ரவுண்ட் 2: அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் இதுதான்!
இந்தநிலையில், 2023 ஆம் ஆண்டின் முதல் தேர்வுகள் ஜூலை 30 ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்வில் வெறும் 10.6% மருத்துவ மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது தேர்வு எழுதிய 24,269 மாணவர்களில் 2,474 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், இந்தத் தேர்வு, பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறி நடத்தப்பட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இந்தியாவில் படிக்கும் எம்.பி.பி.எஸ் மாணவர்களை இந்தத் தேர்வை எழுதச் சொன்னால், அவர்களும் தோல்வியடைவார்கள். FMGE தேர்வு வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களை சோதனையிட அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கேள்விகள் பி.ஜி மாணவர்களின் மட்டத்தில் அமைக்கப்படுவதால், இது இனி ஸ்கிரீனிங் தேர்வாக இருக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, 2002 இல் FMGE அறிமுகப்படுத்தப்படும் வரை, அத்தகைய தேர்வுகள் இல்லை. இந்தியாவில் இன்டர்ன்ஷிப் செய்தவர்கள் உரிமம் பெற்று நாட்டில் பயிற்சி பெறலாம். 2002க்குப் பிறகுதான் எம்.சி.ஐ சட்டம் அமலுக்கு வந்தது. இருப்பினும், ஸ்கிரீனிங் தேர்வை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த விதிமுறைகள் மற்றும் அளவுகோல்களை சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ப்ரீக்ளினிக்கல் பாடங்களுக்கு 100 மதிப்பெண்களும், மருத்துவப் பாடங்களுக்கு 200 மதிப்பெண்களும் இருக்க வேண்டும். அதன்படி, தேர்வுக்கான பகுதிகள் யு.ஜி பாடத்திட்டத்தில் இருந்து, அதாவது முதல் ஆண்டு எம்.பி.பி.எஸ் முதல் இறுதி ஆண்டு வரை இருக்க வேண்டும். மேலும், மறுமதிப்பீடு வசதி மற்றும் பலவற்றை வழங்குவதோடு, கேள்விகளும் பதில்களும் வெளியிடப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது, என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
முதல் FMGE தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே, தேர்ச்சி சதவீதம் மிகக் குறைவாக இருந்ததால் போராட்டங்கள் வெடித்தன. மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தையும் அணுகினர். 2003 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் தேர்ச்சி விகிதம் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை இருந்தது. உச்ச நீதிமன்ற தலையீட்டைத் தொடர்ந்து, MCI, NBE மற்றும் மாணவர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்பட்டது. இது ஒரு இளங்கலைத் தேர்வு என்பதால், அது அந்த மட்டத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும், பி.ஜி-நிலை கேள்விகள் இருக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக அறிவுறுத்தியது. இதனைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 75ஐ தாண்டியது. ஆனால் பின்னர் படிப்படியாகக் குறைந்தது, என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
FMGE தேர்வுக் கட்டணம் ரூ. 7,080 ஆகும், இது இதே போன்ற தேர்வுகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகம். எந்த ஆண்டும் முந்தைய கேள்விகள் மற்றும் பதில்கள் அல்லது விடைக்குறிப்புகள் வெளியிடப்படவில்லை, மேலும் இந்தத் தேர்வில் மறுமதிப்பீடு இல்லை. தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தேசிய தேர்வு வாரியத்திற்கு இதுதொடர்பாக பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருந்தாலும், செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று மாணவர்கள் அமைப்பினர் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil