/indian-express-tamil/media/media_files/2025/10/16/h-1b-hurdles-2025-10-16-16-14-10.jpg)
ஹெச்-1பி விசா சவால்கள்: அமெரிக்காவில் விசா விதி மாற்றங்களால் தவிக்கும் இந்திய மாணவர்கள்
அமெரிக்க குடிவரவு கொள்கைகளில் ஏற்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளால், இந்திய மாணவர்களுக்கும் நிபுணர்களுக்கும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைப்பதில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஹெச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்த புதிய கொள்கை, குறிப்பாக டிகிரி பெறவிருக்கும் பலரைத் தங்கள் திட்டங்களை மறுமதிப்பீடு செய்யவும், வேறு நாடுகளில் வாய்ப்புகளைத் தேடவும் தூண்டியுள்ளது.
சான் டியாகோ பல்கலைக் கழகத்தின் டீன் (Dean) செல்லு ராபர்ட்ஸ் இது குறித்துப் பேசுகையில், “இந்த அறிவிப்பு நில அதிர்வுபோல வந்துள்ளது. நீண்ட காலமாக ஹெச்-1பி விசாவை வாய்ப்புக்கான பாலமாகப் பார்த்த மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களின் அபிலாஷைகளை இது சீர்குலைத்துள்ளது” என்று கூறினார்.
தற்போது, பெரும்பாலான டிகிரி மாணவர்கள் ஓ.பி.டி (Optional Practical Training) திட்டத்திற்கு விண்ணப்பிக்கின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் F-1 விசா வைத்திருப்பவர்கள் பட்டம் பெற்ற பிறகு ஒரு வருடம் அமெரிக்காவில் பணியாற்றலாம். மேலும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பட்டதாரிகளுக்கு 24 மாதங்கள் கூடுதல் நீட்டிப்பும் கிடைக்கும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இருப்பினும், அமெரிக்காவின் பொருளாதாரச் சூழ்நிலை வெளிநாட்டு ஊழியர்களுக்கு சாதகமாக இல்லை. அமெரிக்க தொழிலாளர் புள்ளியியல் துறையின்படி, ஜன. முதல் அக். 2024 வரை அசோசியேட் டிகிரி பெற்ற 20 முதல் 29 வயதுக்குட்பட்ட 3.52 லட்சம் பேரில் 78.1% பேர் மட்டுமே அக்.2024 நிலவரப்படி வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் தற்போது படித்து வரும் பல இந்திய மாணவர்களுக்கு, புதிய கொள்கை கவலையையும் அதே சமயம் எச்சரிக்கையான நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. 2024-ல் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் முடித்த ஆந்திரப் பிரதேசம், குண்டூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், இந்த விதி தன் வேலைவாய்ப்பை மிகவும் சிக்கலாக்கியதாகக் கூறுகிறார்.
“வரவிருக்கும் லாட்டரிக்கு விண்ணப்பிக்க முடியாததால், இந்த புதிய ஹெச்-1பி விசா விதியால் நான் கடுமையாகப் பாதிக்கப்படுவேன். மாணவர்கள் விலக்கு பெற முடியுமா என்று வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம், ஆனால் இன்னும் தெளிவு தேவை,” என்று அவர் கூறினார். மேலும், பெரும்பாலான மாணவர்கள் சர்வதேச அங்கீகாரம், சிறந்த சம்பளம் மற்றும் உலகளாவிய வெளிப்பாடு காரணமாகவே அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைத் தேர்ந்தெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“பல விண்ணப்பதாரர்கள் அதிபரின் உத்தரவை எதிர்த்துச் சட்ட ரீதியாகப் போராடி வருகின்றனர், நீதிமன்றத்தின் முடிவை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். என்னைப் போன்றவர்கள் இங்கேயே தங்கி வேலை செய்ய அரசு நிவாரணம் அளிக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
குடிவரவு வழக்கறிஞர்கள் கூட இந்த ஒழுங்குமுறையின் நோக்கம் குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக அந்த மாணவர் குறிப்பிட்டார். “முக்கியத் துறைகளுக்கு சில விலக்குகள் வரக்கூடும் என்று சிலர் கணித்துள்ளனர். மேலும், அதிக $100,000 கட்டணத்தை விட, சம்பள அடிப்படையிலான அமைப்பு உண்மையில் நியாயமானதாக இருக்கலாம்” என்றும் அவர் கூறினார்.
சான் டியாகோ பல்கலைக் கழக டீன் செல்லு ராபர்ட்ஸ், சட்ட சவால்கள் தொடர்ந்தாலும், நிச்சயமற்ற நிலை இன்னும் நீடிப்பதாகக் கூறினார். “இது நீதித்துறையின் ஆய்வில் தாக்கு பிடிக்குமா? முக்கிய தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்படுமா? அல்லது கடந்த 6 மாதங்களில் வாஷிங்டனில் பல கொள்கைகள் மாறியது போல இது மீண்டும் மாறுமா? உண்மை என்னவென்றால், யாருக்கும் தெரியாது,” என்றார்.
இதற்கிடையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த நிதிப் பகுப்பாய்வில் (STEM) MBA முடித்த 3-ம் ஆண்டு மாணவர் ஒருவர், தற்போது அமெரிக்க நிறுவனத்தில் மூத்த நிதி ஆய்வாளராகப் பணிபுரிகிறார். அவர் ஒரு நடைமுறை முடிவைக் கூறியுள்ளார்: “நான் எனது F-1 OPT-யில் இருக்கிறேன், மேலும் எனது STEM நீட்டிப்பில் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. இந்த போட்டிச் சந்தையில் தங்கிப் பணியாற்ற விரும்பினேன், ஆனால் புதிய விதியால் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க முடிவு செய்துள்ளேன். எனது கடனை அடைப்பேன், சேமிப்பேன், தேவைப்பட்டால் இந்தியா அல்லது வேறு இடங்களில் வாய்ப்புகளைத் தேடுவேன்.”
அமெரிக்காவில் படித்து, பணிபுரிந்த சில இந்தியப் பட்டதாரிகள், புதிய கொள்கை சராசரி கல்விப் பின்னணி கொண்டவர்களை மட்டுமே பாதிக்கும் என்று நம்புகிறார்கள். சிறந்த பட்டங்கள் மற்றும் தேவைப்படும் திறமைகள் கொண்டவர்கள் இன்னும் ஒரு வழியை கண்டுபிடிப்பார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். பாஸ்டன் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் சர்வதேச உறவுகள் முடித்த 26 வயது இளைஞர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“பட்டப்படிப்புக்குப் பிறகு, நான் ஒரு நிதி நிறுவனத்தில் 4 ஆண்டுகள் ஓ.பி.டி-யில் வேலை செய்தேன், பின்னர் அந்த நிறுவனம் எனக்கு ஹெச்-1பி விசாவை ஸ்பான்சர் செய்தது. அனுபவம் பெற்ற பிறகு, இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்மட்ட அமெரிக்கச் சட்டப் பள்ளிக்கு விண்ணப்பித்தேன், ஆனால் விசா விதி காரணமாக எனது சேர்க்கை அடுத்த ஆண்டுக்குத் தாமதமானது. அதனால் அடுத்த ஆண்டு வரை எனது தற்போதைய நிறுவனத்திலேயே தொடர்வேன்,” என்று அவர் கூறினார்.
மதிப்புமிக்க திறமைகளையும் சான்றிதழ்களையும் கொண்டவர்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் மேலும் கூறினார். “எனது முன்னாள் வகுப்புத் தோழர்கள் கவலைப்படவில்லை, ஏனெனில் அவர்கள் தங்கள் வேலைக்கு மதிப்பு சேர்க்கிறார்கள். ஆனால் பலவீனமான அல்லது மதிப்பிழந்த பட்டங்களைக் கொண்டவர்கள் அமெரிக்காவில் தங்கப் போராட வேண்டியிருக்கும்,” என்றார்.
அவர், aspirational (அபிமான) மாணவர்கள் ஒரு தெளிவான நோக்கத்துடன் அமெரிக்கக் கல்வியை அணுகுமாறு வலியுறுத்தினார். “உங்க துறையில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கவும். உதவித்தொகைகளைத் தேடுங்கள்—அது நிறைய பணத்தைச் சேமிக்கும். உங்க இலக்குகளைப் பற்றித் தெளிவாக இருங்கள், கல்வியைக் கால்கோலாகப் பயன்படுத்துங்கள்” என்று அறிவுறுத்தினார்.
இந்தியாவின் வளர்ச்சியை ஒப்புக்கொண்டாலும், இந்தியாவில் நிலவும் படிநிலை அமைப்புகள் (workplace hierarchies) தன்னை இந்தியாவில் வேலை செய்வதைத் தடுக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். “அமெரிக்காவில், உங்களிடம் ஒரு யோசனை இருந்தால், நீங்கள் அதை முன்வைக்கலாம். நான் சட்டம் படித்து டிஜிட்டல் திருட்டு (digital piracy) பிரச்சினையில் பணியாற்ற விரும்புகிறேன்—அதற்கு அமெரிக்காதான் சிறந்த இடம். நான் வேறு இடங்களில் வாய்ப்புகளைத் திறந்து வைத்திருந்தாலும், இந்தியாவில் குடியேறுவது சாத்தியமில்லை” என்றார்.
இறுதி ஆண்டில் இருக்கும் இந்திய மாணவர்களுக்கு, தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துமாறு வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். “வலுவான தொழில்துறைப் பிணைப்பு மற்றும் தெளிவான தொழில் முடிவுகள் கொண்ட திட்டங்களை தேர்ந்தெடுக்கவும்,” என்று எட்டெக் நிறுவனமான GradRight-இன் இணை நிறுவனர் அமன் சிங் கூறினார். “கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவோருக்கு அமெரிக்கா இன்றும் இணையற்ற வாய்ப்புகளை வழங்குகிறது.”
உடனடி எதிர்காலம் நிச்சயமற்றதாகத் தோன்றினாலும், விசா சீர்திருத்தம் இந்திய மாணவர்களை “புத்திசாலித்தனமான கல்வி மற்றும் தொழில் தேர்வுகளை” எடுக்கத் தூண்டும் என்று சிங் கூறினார். “நாங்க இதை ஒரு வாய்ப்பாகவே பார்க்கிறோம். அமெரிக்கா உலகின் சிறந்த திறமைகளை விரும்புகிறது. இது ஒரு மோசமான செய்தி அல்ல—இது சிறப்பாகத் தயாராக, உயர் இலக்கு வைக்க, மற்றும் சிந்தனைமிக்க வெளிநாட்டுப் படிப்பு முடிவுகளை எடுக்க ஒரு அழைப்பு. எனவே, கதவு மூடப்படவில்லை; அது மேலும் தேர்ந்தெடுக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்தக் கவலைகளுக்கு மத்தியிலும், டீன் ராபர்ட்ஸ் மாணவர்கள் உறுதியுடன் இருக்குமாறு வலியுறுத்தினார். “இந்த தருணம் மன அழுத்தமாகத் தோன்றலாம், ஆனால் இது முடிவல்ல,” என்று அவர் கூறினார். “கொள்கைக் குழப்பம் பெரும்பாலும் புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது. நான் இந்தியாவில் ஒரு மாணவனாக இருந்தால், இந்தக் கொள்கை என் பாதையை வரையறுக்க விடமாட்டேன். சாத்தியமான சிறந்த கல்வியில் முதலீடு செய்து, செயற்கை நுண்ணறிவு மற்றும் உலகளாவிய மாற்றத்தால் மறுவடிவமைக்கப்படும் எதிர்காலத்தில் செழிக்கத் தேவையான உறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.