நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நீட் நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் ஒரு முறை இந்த தேர்வு நடத்தப்படும்.
12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் சேர நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மருத்துவ படிப்புகளில் சேர மத்திய அரசால் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம். இதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
அந்த வகையில் இந்தாண்டிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 6-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கிய நிலையில் ஏப்ரல் 13-ம் தேதி முடிவடைந்தது. முன்னதாக பெற்றோர், மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கோரிய நிலையில் ஏப்ரல் 13-ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 2023-24-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆண்களை விட 2.80 லட்சம் பெண்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2.80 லட்சம் மாணவர்கள், உத்தரப் பிரதேசத்தில் 2.70 லட்சம் பேர், தமிழ்நாடு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தலா 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் மே 7-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை சுமார் 499 நகரங்களில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“