தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில், முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி மையங்கள் என அனைத்தையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டார். மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்தார்.
பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி, இன்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில்,பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போல, 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் இன்னும் 3 பாடங்களுக்கான தேர்வுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், தமிழக அரசின் உத்தரவால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா என்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 1 வகுப்புக்கு 23-ம் தேதி உயிரியல் தேர்வும், 26-ம் தேதி வேதியியல் தேர்வும், பிளஸ் 2 வகுப்புக்கு 24-ம் தேதி வேதியியல் தேர்வும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.