பிளஸ் 2 மதிப்பெண் முடிவுகளை வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்த மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மாநில பாடத்திட்ட 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான அக மதிப்பீட்டு முறையை 10 நாட்களுக்குள் உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த அக மதிப்பீட்டு மதிப்பெண்களை ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியிடவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் உயர்கல்வியில் சேர, இந்த மதிப்பெண்கள் முக்கியம் என்பதால், விரைந்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் இந்த காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.
ஏற்கனவே சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து நீதிபதிகளிடம் கூறியபோது, அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் ஒரே மாதிரியாக மாணவர் சேர்க்கையை நடத்த பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தால், அக மதிப்பீட்டு முறையை 10 நாட்களுக்குள் உருவாக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த மாநிலங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்பதால், தமிழகத்திற்கும் இந்த உத்தரவு பொருந்தும். ஏனெனில் தமிழகத்திலும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழக அரசு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க ஒரு குழுவை அமைத்துள்ளது. ஆனால் மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனால் உச்ச நீதிமன்றம் தற்போது அளித்துள்ள இந்த உத்தரவின்படி 10 நாட்களுக்குள் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்த முடிவை தமிழக அரசு எடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil