டி.சி.எஸ் (TCS), டெக் மஹிந்திரா (Tech Mahindra), எல்&டி (L&T), அப்பல்லோ டயர்ஸ் (Apollo Tyres), டைட்டன் (Titan), டிவிஸ் லேப்ஸ் (Divis Labs) மற்றும் பிரிட்டானியா (Britannia) உட்பட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கூட்டாக 13,000 இன்டர்ன்ஷிப்களை பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்ட போர்டல் மூலம் வழங்கியுள்ளன.
இளைஞர்களிடையே உள்ள திறன் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காக மத்திய அரசாங்கம் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட டாப் 500 நிறுவனங்களை மையமாகக் கொண்டு, ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிற்சிகள் விற்பனை, சந்தைப்படுத்தல், உற்பத்தி, உற்பத்தி மற்றும் செயல்பாட்டு மேலாண்மை ஆகியவையாகும். இந்த வாய்ப்புகள் வங்கி, நிதி சேவைகள், எண்ணெய், எரிசக்தி, உணவு, உற்பத்தி மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட துறைகளில் பரவியுள்ளன
இந்த முயற்சியானது, நடப்பு நிதியாண்டில் 1.2 லட்சம் இன்டர்ன்ஷிப்களை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக, கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தில் சுமார் 200 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இத்திட்டத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 500 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஓ.என்.ஜி.சி, இன்ஃபோசிஸ், என்.டி.பி.சி, டாடா ஸ்டீல், ஐ.டி.சி, இந்தியன் ஆயில் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி போன்ற முன்னணி நிறுவனங்களும் அடங்கும்.
செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்கிய முதல் கட்டத்தில், டாப் 500 பட்டியலில் உள்ள நிறுவனங்களை பதிவுசெய்து, இன்டர்ன்ஷிப்களை பட்டியலிட அனுமதிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் சனிக்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மஹிந்திரா & மஹிந்திரா, எல்&டி, டாடா குழுமம் மற்றும் ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் இன்டர்ன்ஷிப்பை வழங்கும் சிறந்த பங்களிப்பாளர்களில் அடங்கும்.
பயிற்சியாளர்களின் முதல் தொகுதி டிசம்பர் முதல் வாரத்தில் வேலையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பயிற்சியாளர்கள் மாதம் ரூ. 5,000 சம்பாதிப்பதோடு, ரூ. 6,000 ஒரு முறை பரிமாற்றமும் பெறுவார்கள். இந்த ஆரம்ப கட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில், கார்ப்பரேட் விவகார அமைச்சகம் இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.