அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (AICTE) நடத்தும் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2020’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுடன் இன்று மாலை கலந்துரையாடினார்.
கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடலை தொடங்கிய பிரதமர், தமிழில் வணக்கம் கூறி தனது உரையை தொடங்கினார்.
இந்த ஆண்டு ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் இன்று தொடங்கி ஆகஸ்ட் ஐந்தாம் தேதி வரை பெறுகிறது.
பிரதமர் தனது உரையில், " ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் புதிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், வேலையை தேடுவதற்கு பதிலாக, வேலையை உருவாக்குவதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கமாகும் " தெரிவித்தார்.
நமது அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சில சிக்கல்களுக்குத் தீர்வுகாண, மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய நாடுதழுவிய ஒரு ஏற்பாடாக இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது.
2017-ல் நடத்தப்பட்ட முதலாவது ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் 42,000 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், 2018-ல் 1 லட்சம் பேராகவும், 2019-ல் 2 லட்சம் பேராகவும் அதிகரித்தது. இன்று தொடங்கும், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-ன் முதல் சுற்றில், 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த வருட, மத்திய அரசின் 37 துறைகள், 17 மாநில அரசுகள் மற்றும் 20 தொழில் நிறுவனங்கள் கொடுத்துள்ள 243 பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மாணவர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த ஆண்டு மென்பொருள் பிரிவினருக்கான மாபெரும் இறுதிப்போட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து போட்டியாளர்களும் ஆன்லைன் வாயிலாக பங்கேற்கும் விதமாக, அதற்கென உருவாக்கப்பட்ட அதிநவீன சிறப்பு அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil