இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணி நியமனத்தில் டி.என்.பி.எஸ்.சி.,யின் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் பற்றி விசாரணை தேவை என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணிக்கான கல்விச் சான்றிதழை சரிபார்ப்பதில் நடைபெற்ற குளறுபடிகள் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 127 பேருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சலுகை காட்டியிருப்பதும், மற்றவர்களுக்கான வாய்ப்புகளை பறித்திருப்பதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் 116 குரூப் 2 பணிகள், 5413 குரூப் 2ஏ பணிகள் என மொத்தம் 5529 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அவற்றில் குரூப் 2ஏ நிலையிலான 926 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்களும் அடங்கும். அந்தப் பணிகளுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற 50 ஆயிரம் பேருக்கு 2023-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் நாள் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது.
முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல், கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் நிறைவடைந்து கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தேர்ச்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதன்பின், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 163 பேருக்கு கடந்த ஜூலை 11-ம் தேதி கடிதம் எழுதிய தேர்வாணையம், ’இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்’ பணிக்கான கல்வித் தகுதியாக பி.பி.ஏ., பி.காம்., பி.காம் (கணினி பயன்பாடு)., பி.ஏ (கூட்டுறவு), பி.ஏ (பொருளியல்), பி.ஏ (கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப்), பி.பி.ஈ ஆகிய படிப்புகள் தான் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், சிலர் பி.காம் (கணக்குப் பதிவியல் மற்றும் நிதி) பட்டம் பெற்று, அந்தத் தகுதியைக் கொண்டு போட்டித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் தாங்கள் பெற்ற பட்டம் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கு இணையானது என்பதற்கான அரசாணையை ஜூலை 22-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்திருந்தது.
அதன்படி அரசாணை தாக்கல் செய்யாத தேர்வர்களின் தேர்ச்சியை ஆணையம் தன்னிச்சையாக ரத்து செய்து விட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தேர்ச்சி சான்றுகளும் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. இதன் பின்னணியில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்திருக்கின்றன. ஆள்தேர்வுக்கான அறிவிக்கையில் தேர்வாணையம் குறிப்பிட்ட பி.காம் படிப்பு தவிர, வேறு சில பி.காம் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பித்தது உண்மை. குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 6 நிலைகளில் அவர்களின் கல்வித் தகுதி மற்றும் அதற்கான சான்றிழ் சரிபார்ப்புகள் நடத்தப்பட்டன.
அப்போதே வேறு பிரிவுகளில் பி.காம் படித்தவர்கள் இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணிக்கு தகுதியற்றவர்கள் என்று அறிவித்திருந்தால், அவர்கள் குரூப் 2ஏ பிரிவில் உள்ள வேறு 59 வகையான பணிகளை தேர்ந்தெடுத்திருப்பார்கள். அந்த பணிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தான் கல்வித்தகுதி என்பதால், அவர்கள் சேருவதற்கு எந்தத் தடையும் இருந்திருக்காது.
ஆனால், 6 நிலைகளில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புகளில் இதை கண்டுபிடிக்கத் தவறிய தேர்வாணையம், தேர்ச்சி சான்றுகளை வழங்கிய பிறகு, வேறு படிப்புகளை படித்தார்கள் என்று காரணம் காட்டி, சான்றுகளை பறித்துக் கொண்டு அவர்களுக்கு வேலை வழங்க முடியாது என்று மறுப்பது நியாயமல்ல. அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்த தவறுக்காக தேர்வர்களை தண்டிப்பது பெரும் தவறு ஆகும். இது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.
பி.காம் பட்டப்படிப்பில் வேறு பிரிவை தேர்வு செய்ததாகக் கூறி வாய்ப்பு மறுக்கப்பட்ட 163 பேரும் ஒரே மாதிரியாக நடத்தப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை. அவர்களில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த 36 பேர், மாவட்ட ஆட்சியராக உள்ள இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவரை அணுகியுள்ளனர். அவரும், தலைமைச் செயலகத்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரும், தேர்வாணையத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரும் வழங்கிய ஆலோசனைப்படி 36 பேரும் தாங்கள் படித்த பி.காம் படிப்பு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கோரப்பட்ட கல்வித்தகுதிக்கு இணையானது என்பதை நிரூபிப்பதற்கான அரசாணைக்கு பதிலாக, தாங்கள் பெற்ற பட்டச் சான்று உண்மையானது என்பதற்கான உண்மைத்தன்மை சான்றை (Bonafide Certificate) மட்டும் தாக்கல் செய்தனர்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அழுத்தத்தால் தேர்வாணையமும் அதை ஏற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட 36 பேருக்கும் பணி வழங்கியுள்ளது. அவர்களுக்கு நாளை முதல்வர் ஸ்டாலின் பணி நியமனச் சான்று வழங்கவிருக்கிறார். அவர்களைப் போலவே மற்ற 127 பேரும் உண்மைத்தன்மைச் சான்று வழங்கும்படி சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களை அணுகிய போது, அவர்கள் எவருக்கும் உண்மைத்தன்மை சான்று வழங்கக்கூடாது என்று தேர்வாணையம் அறிவுறுத்தி இருப்பதாக பல்கலைக்கழகம் கூறிவிட்டதாக தேர்வர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆணையம் கோரிய அரசாணையை தாக்கல் செய்ய முடியாத நிலையில், தங்களின் தகுதிக்கு ஏற்ப வேறு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்க மறுத்த ஆணையம், அவர்கள் அடுத்தமுறை புதிதாக தேர்வு எழுதி தான் வேலை பெற முடியும் எனக் கூறிவிட்டது.
அறிவிக்கப்பட்ட கல்வித்தகுதி இல்லை என்று தேர்ச்சி ரத்து செய்யப்பட்ட 163 பேரில் 36 பேருக்கு மட்டும் பணி வழங்குவது எந்த வகையில் நியாயம்? எனத் தெரியவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் இணைந்தால், ஆணையத்தின் விதிகளை மாற்றலாம் என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் புனிதத்தை இழந்து விடும். தேர்வாணையத்திற்கு தலைவர் (பொறுப்பு), உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து ஆணையத்தை தங்களின் விருப்பப்படி ஆட்டி வைப்பதை அனுமதிக்க முடியாது.
இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதில் நிகழ்ந்த குளறுபடிகளுக்கு தேர்வர்கள் எந்த வகையிலும் காரணமல்ல. அவர்களின் சான்றிதழ்களை முறையாக சரிபார்க்கத் தவறிய அதிகாரிகள் தான் காரணம். எனவே, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்ட 36 தேர்வர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் கொடுத்த அழுத்தத்தால் பணியில் சேர்க்கப்பட்டதன் பின்னணியில் நிகழ்ந்த விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தேர்ச்சி சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட 127 பேரும் தாங்கள் படித்த கல்வி நிறுவனங்களில் இருந்து உண்மைத்தன்மை சான்று பெற்று கொடுத்து இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியில் சேர அனுமதிக்க வேண்டும்; அதற்கு வாய்ப்பில்லை என்றால் அவர்களுக்கு தகுதிக்கேற்ற வேறு குரூப் 2ஏ பணி வழங்கப்பட வேண்டும். அதுவரை மற்றவர்களுக்கு முதலமைச்சரின் கைகளால் பணி நியமனச் சான்று வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்.” இவ்வாறு ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.