/indian-express-tamil/media/media_files/2025/06/21/pondy-collector-office-2025-06-21-21-30-48.jpg)
புதுச்சேரியில் மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்குமாறு புதுவை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், "மத்திய அரசின் பணியாளர்கள் பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission - SSC) குரூப் பி மற்றும் சி பிரிவுகளில் பல்வேறு பணியிடங்களுக்கான நேரடி போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பை கடந்த ஜூன் 9-ஆம் தேதி வெளியிட்டது.
இந்தத் தேர்வுகள் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வுத் திட்டம், வயது வரம்பு, அடிப்படை கல்வித் தகுதி, தேர்வு கட்டணம் போன்ற விவரங்கள் பணியாளர் தேர்வாணையத்தின் ssc.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.
இப்போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ssc.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது mySSC என்ற செல்போன் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 4-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் ஜூலை 5-ஆம் தேதி ஆகும்.
இந்தத் தேர்வுகள் இந்தியாவின் தென்பகுதியில் ஆந்திராவில் 13, புதுச்சேரியில் 1, தமிழ்நாட்டில் 8, தெலங்கானாவில் 3 என மொத்தம் 25 மையங்களில் நடைபெற உள்ளன. புதுச்சேரியைச் சேர்ந்த பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், மத்திய தேர்வாணையம் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கான மற்றொரு அறிவிப்பையும் கடந்த ஜூன் 2-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை, வயது வரம்பு, அடிப்படை கல்வித் தகுதி, தேர்வு கட்டணம் போன்ற விவரங்கள் பணியாளர் தேர்வாணையத்தின் https://ssc.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.