தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு வருகிற 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 15-ம் தேதி திருவள்ளுவர் நாள், 16 ஆம் தேதி உழவர் திருநாள் கொண்டப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு ஜனவரி 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 16-ம் தேதி (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.
அதேநேரம் அந்த வாரத்தில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாளாகவும், அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை என்பதாலும், சொந்த ஊர் செல்பவர்கள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) விடுமுறை வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனால் பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வருகிற 18 மற்றும் 19-ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களும் சனி, ஞாயிற்றுக்கிழமையாகும். ஜனவரி 17-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்தால், தொடர்ந்து விடுமுறைகள் கிடைக்கும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், 17 ஆம் தேதியை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று அரசு அலுவலர் ஒன்றியம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான ஜனவரி 13-ம் தேதி விடுமுறை விடுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோயிலுக்கு செல்வார்கள்.
இந்த நிகழ்வையொட்டி வருகிற ஜனவரி 13-ம் தேதி அன்று ஒருநாள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 25 ஆம் தேதி சனிக்கிழமை பணிநாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருக்கிறார். இதனால், ராமநாதபுரம் மாவட்ட மாணவர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி கூடுதலாக ஒருநாள் விடுமுறை கிடைத்துள்ளது.