கொரோனா பெருந்தொற்று காரணமாக 10, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டன. அதுபோன்ற ஒரு சூழல் மீண்டும் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக, இரு பருவபொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ அறிவித்தது.
அதன்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும். தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான முதல் பருவ சிபிஎஸ்இ தேர்வுகள், நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டுமே அச்சிடப்படுவதை உறுதி செய்யுமாறு பள்ளித் தலைவர்கள் மற்றும் தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவருக்கும் இரு மொழிகளிலும் வினாத்தாள் அச்சிடப்பட வேண்டியதில்லை என வாரியம் கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட பள்ளி அல்லது தேர்வு மையத்தின் மாணவர்களின் தேவைக்கேற்ப ஆங்கிலம் அல்லது இந்தியில் ஏதேனும் ஒரு மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
சில தேர்வு மையங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இது சிபிஎஸ்இ வழங்கிய அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களின்படி இல்லை.
வினாத்தாளின் ஆங்கில பதிப்பு மட்டுமே முதலில் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். எந்தவொரு மாணவருக்கும் வினாத்தாளின் இந்தி பதிப்பு தேவைப்பட்டால் மட்டுமே, இந்தி பதிப்பு வினாத்தாள் அச்சிடப்படும். மீடியம் பயிற்றுவிப்பாக இந்தி இருக்கும் இடத்தில் இதையே பின்பற்ற வேண்டும். இந்தி மொழியே தேர்வர்களின் பயிற்று மொழியாக இருந்தால், தேர்வு மையங்கள் முதலில் வினாத்தாளின் இந்தி பதிப்பை அச்சிட்டு மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது.
இதனிடையே, கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு கவலைக்கு மத்தியில், 8,000 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், 2021-22 ஆம் ஆண்டுக்கான 10, 12 வகுப்பு தேர்வுகளை ஆன்லைனில் நடத்த உத்தரவிடுமாறு வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil