தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக, மதுரை மாவட்டத்தில் ஜூலை 18 ஆம் தேதி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோ.புதூர் பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் சண்முகசுந்தர் கூறியதாவது:
"இந்த முகாமில் 10-ம் வகுப்பு, +2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப் படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதியுள்ள இளைஞர்கள் தங்களுக்கு ஏற்ற பணி வாய்ப்புகளைப் பெறலாம். பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் நேரடியாகக் கலந்துகொண்டு, தகுதியானவர்களைத் தேர்வு செய்து பணி நியமனம் செய்யவுள்ளன."
வேலை தேடுவோர் மற்றும் பணியாளர்களைத் தேர்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள், www.tmprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். முகாமில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள், தங்களது அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றுடன் ஜூலை 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த முகாம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் வழக்கமான பதிவு நடைமுறைகளைப் பாதிக்காது என்றும், தனியார் துறையில் தகுதியான பணிகளைப் பெறுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்தார். வேலை தேடும் மதுரை இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.