போக்சோ சட்ட விதிகள் பற்றி ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும் உள்பட பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் பவ்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளி கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தனியார் பள்ளி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இன்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் பள்ளி வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்தும், வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "இனி பள்ளி வாகனங்களில் ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும். சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு காட்சிகள் சேகரிக்கப்பட்டு காவல்துறையிடம் வழங்கப்பட வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 10 ஆண்டு அனுபவமுள்ள ஓட்டுநரையே பள்ளி வாகனம் இயக்க நியமிக்க வேண்டும்.
ஓட்டுநர்களுக்குத் தினமும் சுவாச சோதனை செய்தபின் தான் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும்.
ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது குற்ற நடவடிக்கை எதுவும் இல்லை என்பதை பள்ளி நிர்வாகங்கள் சரி பார்க்க வேண்டும். வாகன ஓட்டுநர், உதவியாளர் மது அருந்தியுள்ளார்களா என்பதை தினமும் பரிசோதிக்க வேண்டும்.
போக்சோ சட்ட விதிகள் பற்றி ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும். பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி வாகனங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஏப்.5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (தனியார் பள்ளிகள்) உத்தரவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“