கல்வி உரிமை சட்டத்தின் (RTE) கீழ் நடப்பு மற்றும் முந்தைய கல்வியாண்டுகளுக்கான பள்ளிக் கல்வித் துறையின் நிதி நிலுவையில் உள்ள நிலையில், நிதியை விரைவில் விடுவிக்குமாறு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் நலச் சங்கம் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டம் மூலம் 25% இடங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணச் செலவை அரசே ஏற்கிறது. இந்தநிலையில், 2023-24 மற்றும் 2024-25 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளுக்கான ஆர்.டி.இ நிதி அரசிடம் இருந்து நிலுவையில் உள்ளதாக தனியார் பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்படாததால், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் கடினமான நிதிச் சூழ்நிலையில் இருப்பதாகவும், தமிழகத்தில் சுமார் 11,000 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே 2024-25 கல்வியாண்டில், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநரகம் (DMS) தமிழகம் முழுவதும் இருந்து 1.57 லட்சம் விண்ணப்பங்களை மே மாதம் தேர்வு செய்துள்ளது. இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் 84,765 இடங்கள் இருப்பதாக அரசு அறிவித்தது.
மேலும், மார்ச் மாதம் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான ஆர்.டி.இ சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க தனியார் பள்ளிகளுக்கு ரூ.383.59 கோடியை தமிழக அரசு வழங்கியது.
இந்தநிலையில், 2022-23 கல்வியாண்டு நிதியை சில மாதங்களுக்கு முன்புதான் நாங்கள் பெற்றோம். மேலும், நிதியை வெளியிடுவதில் ஏற்கனவே தாமதம் உள்ளது, இது தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கிறது. தனியார் பள்ளிகளின் இயக்குனரகம் ஏற்கனவே தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விவரங்களை ஆர்.டி.இ மூலம் சரிபார்த்துள்ளதால், விரைவில் நிதியை வழங்குமாறு அரசை வலியுறுத்துகிறோம் என தனியார் பள்ளிகள் சங்கம் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“