அறப்பணியில் இருந்து தெருப்பணிக்கு வந்த ஆசிரியர்கள்

தற்பொழுது தனியார்ப் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், வாழ்க்கையை நகர்த்துவதற்கு வேறு வழியின்றி, எவ்விதப் படிப்புச் சான்றிதழும் தேவையில்லாத வேலையாட்கள் செய்கின்ற 100 நாள் வேலைத்திட்டத்தில்...

முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்

ஆனா… ஆவன்னா… தொண்டை வலிக்கக் கத்தினோம். கல்லையும் கடவுளாக்கினோம்… மண்ணையும் பொன்னாக்கினோம்… மனிதத்தை மட்டுமே மார்க்கமாக விதைத்தோம்… வகுப்பறை ஒன்றையே சரணாகதியென்று நினைத்தோம்… ஆயிரமோ, பதினாயிரமோ கிடைத்ததைக் கொண்டு திருப்தியானோம்… ஆனால் இன்று…

இது ஏதோ தெருப்போக்கனின் புலம்பலென்று நினைக்காதீர்கள். அறப்பணியாம் ஆசிரியர்ப் பணியை சிரமேற்கொண்ட ஆசிரியர்களின் ஆதங்கம்… அனாதையாக்கப்பட்டவர்களின் ஏக்கம்… கேட்பாரற்றுக் கிடப்போரின் வேகம்…

ஆம், தனியார் பள்ளிகளில் மாதம் மூவாயிரத்திலிருந்து அதிக பட்சமாக எட்டாயிரம், பத்தாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு வறுமையை வெளியே காட்டாமல் நாணயத்துடன் வாழ்க்கைய நகர்த்திக் கொண்டிருந்த லட்சோப லட்சம் ஆசிரியர்களின் ஆவேசக் குரல் தான் இது.


மார்ச் மாதம் பள்ளியின் இறுதியாண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் போது, யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்காமல், நம் நாட்டில் குடியேறியது கொடியக் கொரோனா. நாளை பொழுது விடிவதற்குள் வந்து நின்றது லாக்டவுன். முதலில் ஒரு நாள்… அடுத்தது ஒரு வாரம்… தொடந்து இரண்டு வாரம்… இப்படி லாக்டவுன் இரண்டு மாதங்கள் தொடர்ந்தது. ஆனாலும் இரண்டு மாதங்கள் கடந்து எல்லா வேலைகளும் கொஞ்சம் சொஞ்சமாக ஆரம்பிக்கப்பட்டன. அவரவர்களின் வாழ்க்கையும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் மாதங்கள் மூன்று கடந்த பிறகும் இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்கவில்லை. தனியார் பள்ளிக் கல்லூரிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சம்பளமும் இல்லை.

தமிழகத்தைப் பொறுத்த வரை தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் பல லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் செய்யும் வேலையோ மிக அதிகம். கிடைக்கும் சம்பளமோ மிகக் குறைவு. ஆரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தோடு ஒப்பிடும் போது தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களி்ன் சம்பளம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசத்திற்கு நிகராகும்.

லாக்டவுன் தொடங்கியதிலிருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு காசு கூட சேதாரமின்றி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மாதங்கள் மூன்று தாண்டியப் பிறகும் ஒரு காசு கூட சம்பளம் இல்லாமல் தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர். அதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, என்ன செய்வது? எப்படிக் குடும்பத்தை நடத்துவது? என அறியாமல் திகைத்து, திக்குமுக்காடியுள்ளனர். இதே நிலைதான் அப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியரல்லாதப் பணியாளர்களுக்கும்.

பள்ளி நிர்வாகத்திடம், சம்பளம் கேட்டால் ‘மாணவர்கள் பீஸ் கட்டாமல் நாங்கள் எப்படிச் சம்பளம் தரமுடியும் எனக் கேட்கின்றார்கள்.’ அவர்களின் அந்தக் கேள்வியிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஏனேன்றால் அரசு, ‘மாணவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் பள்ளிகள் திறக்கும் வரை கல்விக் கட்டணம் எதுவும் கேட்கவோ, வாங்கவோ கூடாது’ எனக் கராறாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தனியார்ப் பள்ளிகள், மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கவும், பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் கேட்கவும் தயக்கம் காட்டுகின்றனர். அப்படிக் கேட்டாலும் பெற்றோர்கள் அரசின் அறிவிப்பைக் சுட்டிக்காட்டி, பள்ளி நிர்வாகத்தைப் பயமுறுத்துகின்றனர்.

ஆனால் அரசு, தனியார்ப் பள்ளியாசிரியர்களைக் குறித்துக் கடுகளவிற்கும் கவலைப்படவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. இப்படி அரசு நடந்து கொள்வது “ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மறு கண்ணில் சுண்ணாம்பும்” என ஊருக்குள் கூறும் பழமொழியை ஒத்துள்ளது என்கின்றார்கள் தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள்.

நிலைமை இப்படியிருக்கத் தற்பொழுது தனியார்ப் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், வாழ்க்கையை நகர்த்துவதற்கு வேறு வழியின்றி, எவ்விதப் படிப்புச் சான்றிதழும் தேவையில்லாத வேலையாட்கள் செய்கின்ற 100 நாள் வேலைத்திட்டத்தில் சேர்ந்து ரோட்டில் மண் அள்ளும் வேலைச் செய்யும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சில ஆசிரியைகள் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், ஸ்டோர்களிலும் சேல்ஸ் கேர்ல்ஸ்சாகப் பணியாற்றுகின்றார்கள். சிலர் இட்லி கடைகள் நடத்துகின்றார்கள்.

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பிரபலமானப் பள்ளியில் நல்ல செல்வாக்குடன் முதல்வர் பணியாற்றி வந்த ஒருவர், தனது சொந்த ஊரில் மனைவியுடன் சேர்ந்து தள்ளு வண்டியில் ஊர் ஊராகச் சென்று இட்லி, தோசை, வடை விற்று குடும்பத்தை நடத்தி வருகின்றார். இன்னும் சிலர் தங்களின் வீடுகளில் வைத்து காய்கறி வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். வேறு சிலரோ தங்களின் ஊர்களிலேயே கூலி வேலை கூடச் செய்கின்றனர்.

“எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம் சார். ஆனால், பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த நான், இப்ப ரோடு வேலை செய்வதை, நான் படிச்சுக் கொடுத்தப் பசங்களும், அவங்க பெற்றோரும் பார்க்கும் போது, அவர்களைப் பார்த்து நான் தலைகுனிஞ்சு நிற்க வேண்டியிருக்கு அல்லது முகத்தைத் திருப்பி வைச்சிட்டு நிக்க வேண்டி வருது. அத நினச்சுப் பாக்கும்போதுதான் நெஞ்சு வெடிச்சிரும் போலிருக்கு” என 100 நாள் வேலைத் திட்டத்தில் சேர்ந்து ரோட்டில் மண்ணள்ளும் வேலை செய்யும் ஓர் ஆசிரியர் கூறிய போது, அவர்களின் முன் நம்ம நெஞ்சு வெடிச்சிரும் போல் இருந்தது.

இப்படித் தனியார்ப் பள்ளிகளில் வேலை செய்து விட்டு, தற்போது வேறுவேறு வேலைகள் செய்து வரும் ஒவ்வொரு ஆசிரியரின் மன நிலையும் உள்ளது என்பது நெஞ்சை உலுக்கும் உண்மை. உலக வரலாற்றில், மாணவர்களுக்கு ஆறிவுப் புகட்டும் ஆசிரியர்களுக்கு இப்படியொரு நிலைமை வந்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.

எனவே மத்திய, மாநில அரசுகள், அனைத்து மாநிலங்களிலும் தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகளிலும், சுயநிதிப் பள்ளி, கல்லூரிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பரிதாப நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் அன்றாட வாழ்வாதாரத்தை வழிநடத்திச் செல்லும் அளவிற்கு, பள்ளிகள் மீண்டும் திறந்து செயல்படும் வரை விவாரண நிதி வழங்க வேண்டும். மேலும், அடுத்து, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்யும் போது, தனியார்ப் பள்ளிகளில் பணியாற்றும், முழுமையானக் கல்வித் தகுதியுடைய, அதிக அனுபவம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி முன்னுரிமை வழங்க வேண்டும்.

கூடவே தமிழக அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 என்பதை மாற்றி பழையது போல் 58 என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். என்றால் மட்டுமே இது போல் காலாகாலமாக தனியார்ப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒருசிலருக்காவது, அவர்களின் ஓய்வு வயதிற்கு முன்பு சில ஆண்டுகாலமாவது அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். இதுவே இந்த ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்த கட்டுரையை எழுதியவர் முனைவர் கமல. செல்வராஜ்
அருமனை. அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close