கோவை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற வணிக வரி உதவி ஆணையர் மதுவர்ஷினி, கிராமப்புற மேம்பாட்டு உதவி இயக்குநர் ஹர்ஷா மற்றும் டி.எஸ்.பி பியூலா ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் இ. பாலகுருசாமி தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, "குடிமைப் பணி என்பது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முதுகெலும்பு. மக்களுக்கு சேவை செய்வதே அரசு ஊழியர்களின் அடிப்படைக் கடமை. அவர்கள் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்கள். இந்தியாவை 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்றும் கனவை நனவாக்க அரசு ஊழியர்களும் அரசியல்வாதிகளும் கடுமையாக உழைக்க வேண்டும். இல்லையெனில் இது வெறும் அறிக்கையாகவே நின்றுவிடும். இந்தியா தனது கல்வி முறை, சுகாதாரம் மற்றும் தனிநபர் வருமானத்தை மேலும் மேம்படுத்த வேண்டியது அவசியம். அப்போது தான் நமது நாடு அரசாங்கம் விரும்புவது போல் வளர்ந்த நாடாக மாறும்.
அரசு ஊழியர்களாக விரும்பும் மாணவர்கள் புறநிலையாக முடிவுகளை எடுக்கவும், சமூகத்தின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு விரைவாக பதிலளிக்கவும், பணியில் மிகுந்த வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கவும், பொறுப்புணர்வுள்ள நபராகவும் இருக்க வேண்டும். தங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களுக்கு 'இல்லை' என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். எப்போதும் ஒழுக்க ரீதியாகவும், நெறிமுறை ரீதியாகவும் வலிமையான நபராகவும் இருங்கள்" என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் கோவை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் மையத் தலைவர் அருண் செந்தில்நாதன், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி - பி. ரஹ்மான்