தமிழகம் தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) மாதத்திற்கு சுமார் 10,000 கூடுதல் வேலைகளை உருவாக்கி வருவதாகவும், இதை மாதத்திற்கு 20,000-25,000 வேலைகளாக அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) வருடாந்திர ஐ.சி.டி மாநாடு கனெக்ட் 2023 சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், அதிவேக இணைய இணைப்பு, அரசு சேவைகளில் டிஜிட்டல் மாற்றம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் சாதகமான புதுமையான சூழலை உருவாக்குதல் போன்றவை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய முன்னுரிமை அம்சங்களாகும். தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறனை முன்னிலைப்படுத்த நாங்கள் பல செயல்முறைகளை நெறிப்படுத்தவும், தீவிர பிரச்சாரங்களை நடத்தவும் உள்ளோம்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இணைய இணைப்பை வழங்கும் பாரத்நெட் திட்டமும் செயலில் உள்ளது. அடுத்த ஆண்டு இந்த நேரத்தில், தமிழ்நாட்டின் 100% பஞ்சாயத்துகளுக்கு ஃபைபர் அடிப்படையிலான 100 mbps இணைப்பு வழங்கப்பட்டு இருக்கும்.
தமிழகம் தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) மாதத்திற்கு சுமார் 10,000 கூடுதல் வேலைகளை உருவாக்கி வருகிறது. இதை மாதத்திற்கு 20,000-25,000 வேலைகளாக அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறோம். உண்மையில், பெங்களூரு போன்ற நகரங்களை விட நாம் பின்தங்கியுள்ளோம், ஆனால் தற்போதைய நிலையற்ற தன்மையை நமக்கு சாதகமாக பயன்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாகும்," இவ்வாறு அமைச்சர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“