பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த வாரம் 3 நாட்கள் வார இறுதி விடுமுறை வரவுள்ளது. ஆகஸ்ட் 11 அன்று தொடங்கும் இந்த வாரம், நான்கு வேலை நாட்களை மட்டுமே கொண்ட ஒரு குறுகிய வாரமாக உள்ளது. இந்த ஆண்டு சுதந்திர தினம்(ஆகஸ்ட் 15) வெள்ளிக்கிழமை வருவதால், மாணவர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வருகின்றனர்.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆகஸ்ட் 15 அன்று நடைபெறும் அணிவகுப்பு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால், இது வழக்கமான விடுமுறைபோல இருக்காது. இருப்பினும், இது வகுப்பறை சூழலில் இருந்து விடுபட்ட பாதி விடுமுறை நாளாக இருக்கும். கொடியேற்றம் முடிந்ததும் மாணவர்கள் வீட்டிற்கு செல்லலாம்.
2025 ஆம் ஆண்டு கல்வி அட்டவணையின்படி, இந்த ஆண்டு மாணவர்களுக்கு மொத்தம் 210 வேலை நாட்கள் உள்ளன. அடுத்த பெரிய விடுமுறை, காலாண்டு விடுமுறை ஆகும். இது செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 வரை தேர்வுகளுக்குப் பிறகு வரும். மேலும், இந்த மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் உள்ளது. எனவே இந்த மாதத்தில் மாணவர்களுக்கு அதிக விடுமுறை வர உள்ளது.
அக்டோபர் 6 அன்று இரண்டாவது பருவம் தொடங்கியதும், மீண்டும் வழக்கம்போல பணிகள் தொடங்கும். இரண்டாவது பருவ இடைத்தேர்வு நவம்பர் 11 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின், அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 15 முதல் 23 வரை நடைபெறும். பின்னர், டிசம்பர் 24 முதல் ஜனவரி 2, 2026 வரை அரையாண்டு விடுமுறைக்காக பள்ளிகள் மூடப்படும்.
ஜனவரி 3-4 வார இறுதியைத் தொடர்ந்து, ஜனவரி 5 அன்று மூன்றாவது மற்றும் இறுதிப் பருவம் தொடங்குகிறது. 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 8 முதல் 21 வரையிலும், இரண்டாவது திருப்புதல் தேர்வு ஜனவரி 27 முதல் பிப்ரவரி 4 வரையிலும் நடைபெறும்.
9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மூன்றாவது பருவ இடைத்தேர்வு பிப்ரவரி 17 முதல் 19 வரை நடத்தப்படும். 2025-26 கல்வியாண்டிற்கான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 10 அன்று தொடங்கும். ஏப்ரல் 24 கடைசி வேலை நாளாக இருக்கும். அதன்பின் ஏப்ரல் 25 முதல் கோடை விடுமுறைகள் தொடங்கும்.