தமிழகம், புதுவையில் கடந்த ஏப்ரலில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 7 ஆயிரத்து 797 மாணவர்களும், 7 ஆயிரத்து 618 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 415 பேர் தேர்வு எழுதினர் இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 6 ஆயிரத்து 700 மாணவர்களும், 7 ஆயிரத்து 38 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுவை, காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.12 சதவீதம். புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 78.92 ஆகும்.
கடந்த ஆண்டு அரசு, தனியார் பள்ளிகளில் 92.92 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அரசு பள்ளிகளில் மட்டும் 85.01 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 3.8 சதவீதமும், அரசு பள்ளிகளில் மட்டும் 6.09 சதவீதமும் குறைந்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
கொரோனா காலகட்டத்தில் 2 ஆண்டாக பள்ளிகள் இயங்கவில்லை. அதோடு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சியும் அளிக்கப்பட்டது. இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிவிகிதம் குறைந்துள்ளது. இருப்பினும் 100 சதவீத தேர்ச்சியை நோக்கியே அரசு செல்கிறது. தனியார் பள்ளிகளோடு அரசு பள்ளிகளை ஒப்பிடக்கூடாது.
தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் யார்? அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் யார்? என்பதை அறிந்துகொள்ள வேண்டும். கல்வித்துறை, சுகாதாரத்துறையில் நாம் முதலிடம் வகித்து வருகிறோம். அரசு பள்ளிகளை சிபிஎஸ்இ தரத்துக்கு உயர்த்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம் என தெரிவித்தார்.

புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:
கொரோனா காலகட்டத்தில் 2 ஆண்டாக மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தோம். பள்ளிகளும் இயங்காததால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கலாம். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டுமே பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
ஆனாலும் புதுவை அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆராய குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கிராமப்புறங்களை சேர்ந்த அரசு பள்ளிகள்தான் 100 சதவீத தேர்ச்சி அளிக்கிறது. இதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். புதுவையில் ஒட்டுமொத்தமாக 127 பள்ளிகளில் தற்போது வரை 116 பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு ஏற்ப பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி அளித்து வருகிறோம். ஆங்கிலம், தமிழ் பாடத்துக்கும் பயிற்சி அளிக்கிறோம். இந்த பயிற்சி ஆசிரியர்களுக்கும் அளிக்கப்படும். அகில இந்திய தேர்வுகளில் புதுவை மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சிபிஎஸ்இ பள்ளிகளாக அரசு பள்ளிகளாக மாற்றியுள்ளோம்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். வரும்காலங்களில் நீட், ஜேஇஇ ஆகிய தேர்வுகளில் புதுவை மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“