மருத்துவக் கவுன்சிலில் மொத்தமுள்ள 389 அரசின் மருத்துவ இடங்களில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினால், அரசு பள்ளியில் படித்த சுமார் 28 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்கின்ற வாய்ப்பு கிடைக்கும். எனவே, இந்த ஆண்டு நடைபெறும் சென்டாக்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி உள்ஒதுக்கீட்டை வழங்க உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநரை சந்தித்து அ.தி.மு.க நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
இதையும் படியுங்கள்: ஸ்டான்லி, தர்மபுரி மருத்துவ கல்லூரிக்கு மீண்டும் அங்கீகாரம்
தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் முன்னாள் முதலமைச்சர், தற்போதைய தமிழக எதிர்க்கட்சித் தலைவர், கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அரசு பள்ளியில் கல்வி பயிலும் ஏழை, எளிய, கிராமப்புற மாணவ, மாணவியர்களின் நலன் கருதி மருத்துவக் கல்வியில் அரசின் இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கொண்டுவந்தார்.
வரலாற்று சிறப்புமிக்க இச்சட்டத்தின் மூலம், அரசு பள்ளியில் பயின்ற ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றமும், உயர் நீதி மன்றமும் தள்ளுபடி செய்து இச்சட்டத்தை உறுதி செய்தன.
தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கடந்த தி.மு.க, காங்கிரஸ் ஆட்சியின் போது அ.தி.மு.க பலமுறை வலியுறுத்தியது. ஆனால், அப்போதைய தி.மு.க, காங்கிரஸ் அரசு அரசியல் கண்ணோட்டத்துடன் இச்சட்டத்தை அமல்படுத்த முன்வரவில்லை. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக இச்சட்டத்தைக் கொண்டுவர அ.தி.மு.க சார்பில் பலமுறை அரசை வலியுறுத்தியும் இச்சட்டம் கொண்டு வரப்படவில்லை.
புதுச்சேரி மாநிலத்தில் இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்காக சுமார் 924.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெறுவதால் விரல் விட்டு எண்ணக்கூடிய மூன்று, நான்கு மாணவர்கள் மட்டுமே ஆண்டு தோறும் நீட் தேர்வு தகுதி அடிப்படையில் மருத்துவ கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூட நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பெற்றிருந்தும் ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வியில் சேரும் சூழ்நிலை உள்ளது.
இவ்வாண்டு நடைபெறும் மருத்துவக் கவுன்சிலில் மொத்தமுள்ள 389 அரசு மருத்துவ இடங்களில், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினால், அரசு பள்ளியில் படித்த சுமார் 28 மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். எனவே, இவையெல்லாம் கருத்தில் கொண்டு மருத்துவம் பயின்ற துணை நிலை ஆளுநர் இந்தாண்டு நடைபெறும் சென்டாக்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி உள்ஒதுக்கீட்டை வழங்க உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். இதன் மூலம் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களின் உயர் கல்வி ஒளிமயமாக்கப்படும். முதலமைச்சரின் கருத்தினைக் கேட்டறிந்து துணை நிலை ஆளுநர் உரிய அரசாணையை வெளியிட வேண்டும் என அ.தி.மு.க சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில கழக இணைச் செயலாளர், முன்னாள் கவுன்சிலர் கணேசன், மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.