புதுச்சேரியில் மருத்துவம் படிக்க என்.ஆர்.ஐ இடஒதுக்கீட்டில் 61 மாணவர்கள் போலி ஆவணங்கள் மூலம் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இது சம்பந்தமாக தேசிய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் புதுச்சேரி மாநில அ.தி.மு.க வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி அ.தி.மு.க அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், “புதுச்சேரி மாநிலத்தில் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மருத்துவம் சார்ந்த கல்வி பயில மொத்த இடங்களில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அதன்படி 116 இடங்கள் ஆண்டு தோறும் என்.ஆர்.ஐ இடங்களாக நிரப்பப்படுகின்றன. நல்ல உயரிய எண்ணத்தில் கொண்டுவரப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை ஆண்டுதோறும் குறுக்கு வழியில் போலி சான்றிதழ் அளித்து முறைகேடாக அரசின் துணையோடு வசதி படைத்த மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
மேலும், ஆண்டுதோறும் மருத்துவக் கல்வியில் என்.ஆர்.ஐ இட ஒதுக்கீட்டை நிரப்ப அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஒரு மாபியா கும்பலே திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இவ்வாண்டு 116 என்.ஆர்.ஐ கோட்டாவிற்காக 186 மாணவர்கள் நுழைவு கட்டணமாக ரூ.2 இலட்சம் செலுத்தி தங்கள் பெயரினை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சான்றிதழ் சரி பார்க்கும்போது அதில் 61 மாணவர்களின் சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக துணை நிலை ஆளுநர் தேசிய புலனாய்வு விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்பழகன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“