அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இந்தாண்டு 371 எம்.பி.பி.எஸ் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக நிரப்பப்பட உள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கை சென்டாக் கவுன்சலிங் மூலம் நடைபெறுகிறது. புதுச்சேரியில் ஒரு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ளன. இக்கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக முதல்வர் ரங்கசாமி தலைமையில் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து, எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களை இறுதி செய்து, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் மூலமாக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு மருத்துவ கல்லூரியை பொறுத்தவரை மொத்தமுள்ள 180 எம்.பி.பி.எஸ் இடங்களில் 131 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 27 இடங்களும், என்.ஆர்.ஐ பிரிவுக்கு 22 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில், பிராந்தியம் வாரியாக புதுச்சேரிக்கு 98 இடங்கள், காரைக்காலுக்கு 24 இடங்கள், ஏனாமுக்கு 4 இடங்கள், மாகிக்கு 5 இடங்கள் என எம்.பி.பி.எஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி பிராந்தியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 98 எம்.பி.பி.எஸ் இடங்களில், பொதுப்பிரிவு - 39, இ.டபுள்யூ.எஸ் - 10, ஓ.பி.சி - 11, எம்.பி.சி - 17, எஸ்.சி - 16, மீனவர் - 2, முஸ்லீம் - 2, எஸ்.டி - 1 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 9, மாற்றுத்திறனாளிகளுக்கு 5, விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 4, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 1, விளையாட்டு வீரர்களுக்கு 1 இடம் உள் ஒதுக்கீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவ கல்லூரிகளை பொறுத்தவரை பிம்ஸ் நிறுவனத்தில் 57 இடங்கள், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில் 92 இடங்கள், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் 91 இடங்கள் என மொத்தம் 240 எம்.பி.பி.எஸ் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக இந்தாண்டு பெறப்பட்டுள்ளன.
இந்த இடங்கள் பொதுப்பிரிவு - 120, ஓ.பி.சி - 27, எம்.பி.சி - 43, எஸ்.சி - 38, மீனவர் - 5, முஸ்லீம் - 5, எஸ்.டி - 1, எஸ்.டி - 1 என்ற இட ஒதுக்ககீடு அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், உள் ஒதுக்கீடாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 24, மாற்றுத்திறனாளிகளுக்கு 12, விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 10, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 2, விளையாட்டு வீரர்களுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக அரசு மருத்துவ கல்லூரியில் 131, மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளில் 240 என மொத்தம் 371 எம்.பி.பி.எஸ் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக இந்தாண்டு சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மொத்தமாக 33 எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.