/indian-express-tamil/media/media_files/2025/05/12/1BJhNxRx2u5EnIfB4FUo.jpg)
புதுச்சேரி, போலி ஆவணங்கள் மூலம் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 12 மாணவர்களை தரவரிசை பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி சென்டாக் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,657 மாணவர்கள் சென்டாக்கில் விண்ணப்பித்து உள்ளனர். தற்போது திருத்தப்பட்ட தரவரிசை பட்டியலில் 1,576 பேர் உள்ளனர்.
இவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது தமிழகத்தை சேர்ந்த 8 பேர், கேரளாவை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 12 மாணவர்கள் போலி ஆவணங்கள் மூலம் இரட்டை குடியுரிமை பெற்று கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த மாணவர்கள் விளக்கம் அளிக்கும்படி சென்டாக் நிர்வாகம் அவர்களுக்கு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியது. அதன்பேரில் அந்த மாணவர்கள் விளக்கம் அளித்தனர். இதில் அவர்கள் போலியான இரட்டை குடியுரிமை சான்றிதழ் சமர்ப்பித்து இரு மாநிலங்களிலும் விண்ணப்பித்து இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 12 பேரையும் தரவரிசை பட்டியலில் இருந்து சென்டாக் அதிரடியாக நீக்கியுள்ளது.
இந்தநிலையில் அரசு, தனியார், சிறு பான்மையினர் ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கான இறுதி தரவரிசை பட்டியல் சென்டாக் இணையதளத்தில் (www.centacpuducherry.in) வெளியிடப்பட்டது. மேலும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள் தங்களது தரவரிசையை, டேஷ் போர்ட்டுமூலம் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இரட்டை குடியுரிமை மூலம் சென்டாக் நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகளை சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர் மற்றும் முதல்வர் உத்தரவிட வேண்டும் என மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி கவர்னர் மற்றும் முதல்வர் உட்பட சுகாதார துறை அதிகாரிகளிடம், இரட்டை குடியுரிமை, போலி சான்றிதழ், ஆவணங்கள் மூலம் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ சீட்களுக்கு இரு மாநிலங்களில் விண்ணப்பித்த மாணவர்களின் விபரங்களை உரிய ஆவணங்களோடு புகாராக அளித்தோம். இதை விசாரித்த சென்டாக் நிர்வாகம், அதன் முடிவை புதுச்சேரி சுகாதாரதுறை இயக்குநரகம் அலுவலகத்திற்கு கோப்பாக வழங்கியது. சுகாதார துறை இயக்குநரகத்தில் சரிபார்த்ததில், தமிழகத்தில் 8 பேரும், கேரளாவில் 4 பேரும் இருவேறு மாநிலங்களில் அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தது நிரூபனமானது. இவர்களை, சுகாதார துறை இயக்குநரகம் மூலம் புதுச்சேரி மாநில அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலிலிருந்து நீக்க உத்தரவிடப்பட்டது.
நீக்கிய 12 மாணவர்கள் சென்டாக்கில் சமர்ப்பித்த விண்ணப்பங்கள், நீட் மதிப்பெண், இருப்பிடம், சாதி சான்றிதழ்களை தற்போது வரை புதுச்சேரி சென்டாக் நிர்வாகம், சுகாதாரதுறை சரிபார்க்காதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை குடியுரிமை மூலம் பல ஆண்டுகளாக சென்டாக் நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகளை சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர், முதல்வர் உத்தரவிட வேண்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.