புதுச்சேரியில் இந்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் வகுப்புகள் நடக்கின்றன. இதற்காக ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்
Advertisment
புதுச்சேரி கல்வித்துறை ஆலோசனைக் கூட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று (19-06-2023) நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, கல்வித்துறைச் செயலர் ஜவஹர், துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌதரி, பொலிவுறு நகரத் திட்ட இணை தலைமை நிர்வாக அதிகாரி ருத்ர கௌடு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, இணை இயக்குநர் சிவகாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடை வழங்குதல், நீட் பயிற்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரித்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் உள்ள சவால்களை சந்திக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அனைத்து பள்ளிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளின் தரமும் உயர்த்தப்பட வேண்டும். டிஜிட்டல் / ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும்.
மாணவர்களுக்கான மதிய உணவில் வாரத்தில் இரண்டு நாட்களாவது சிறுதானிய உணவு வழங்க வேண்டும்.
நீட் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் வல்லுனர்களை் கொண்டு சிறப்பாக நடத்தப்பட வேண்டும். இந்த முறை பயிற்சி மூலமாக 30 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இன்னும் அதிக மதிப்பெண்கள் பெரும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும்
நீட் தேர்வில் அரசு பள்ளிகளிலிருந்து தேர்வாகும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மாதத்தில் ஒரு நாள் “NO BAG DAY“ கடைபிடிக்க வேண்டும். அந்த நாளில் கைவேலை, கலை, விளையாட்டு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருப்பதை உடனே ஆய்வு செய்து, அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். படிப்பைத் தொடர முடியாத இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கு வர ஊக்கப்படுத்த வேண்டும்
அரசு பள்ளிகளில் பொதுத்தேர்வுகளில் முதல் இடங்களை பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து மாணவர்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும்.
மேற்கண்ட ஆலோசனைகளை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தினார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil