அரசு பள்ளிகளை மேம்படுத்த புதுவையை சேர்ந்த தொழிலதிபர்கள் முன்வந்தால் நன்றாக இருக்கும் என புதுச்சேரி துணைநிலை தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை திடீர் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
புதுவை பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வந்த சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி கட்டிடம் சிதிலமடைந்துள்ளது. இதனால் பள்ளியை கடந்த ஆண்டு குருசுகுப்பம் என்.கே.சி. பள்ளியில் இணைத்தனர். அப்போது அங்கு படித்து வந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களை சமாதானப்படுத்தி பள்ளி கடந்த கல்வியாண்டில் அங்கேயே இயங்கியது. பாரதியார் பள்ளி கட்டிடம் புதுப்பிக்கப்படவில்லை.
இதையும் படியுங்கள்: புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ சிலபஸ் அமல்; ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க ஆளுனர் தமிழிசை உத்தரவு
நடப்பு கல்வியாண்டில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளியை கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர். இதற்கு பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாணவிகளை பள்ளிக்குள் விடமால் கேட்டை மூடி போராட்டம் நடத்தினர். வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளியை திரு.வி.க. பள்ளியில் இணைக்க சம்மதிக்கமாட்டோம் என்றும் ஷிப்ட் முறையில் இயங்கவும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் மறைமலை அடிகள் சாலையில் அமர்ந்து பள்ளி திறந்த இரண்டாம் நாளே மறியல் நடத்தினர். அமைச்சர் நமச்சிவாயம் மறியல் செய்த மாணவிகளை சமாதானப்படுத்தினார். தொடர்ந்து பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக ஓராண்டு மட்டும் பள்ளியை இடமாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார்.
இதன்பிறகு, இன்று முதல் வீராமுனிவர் ஆண்கள் பள்ளி கட்டிடத்தில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி இயங்குகிறது. வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளி மாணவர்கள், திரு.வி.க. பள்ளியோடு இணைத்து ஒரே ஷிப்ட் முறையில் பாடம் படிக்கின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் போராட்டம், இடமாற்றம் குறித்து கேள்விப்பட்ட கவர்னர் தமிழிசை, வீரமாமுனிவர் பள்ளிக்கு சென்று சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாணவிகளை சந்தித்தார். பள்ளி துணை முதல்வர் கவுரி தலைமையில் ஆசிரியர்கள் வரவேற்றனர்.
அப்போது தங்கள் பள்ளி முழு நேரம் இயங்கவும், கட்டடத்தை இடமாற்றம் செய்ய உதவியை கல்வித்துறை அதிகாரிகளுக்கும், கவர்னருக்கும் மாணவிகள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து கவர்னர் தமிழிசை முதல்தளத்தில் உள்ள பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பறைகளுக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த மாணவிகளோடு அமர்ந்து பேசினார். பின்னர் பரிசோதனை கூடத்துக்கு சென்றார். அது பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக பார்வையிட்டு பின் கீழே வந்தார்.
பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு பெண்கள் பள்ளியை மாற்றியது சவாலான சூழ்நிலைதான். அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் மிக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். குழந்தைகள் படிக்க வேண்டும் என போராடியதை பாராட்ட வந்தேன். பெண்கள் தங்களின் தேவையை உரக்க சொல்லியுள்ளனர். அதற்கான வழியை அரசும், சமுதாயமும் பெற்றுத் தந்துள்ளது. அதற்காக அனைத்திற்கும் போராட வேண்டும் என்பது இல்லை. பள்ளி கல்வித்துறையிடம் பரிசோதனைக்கூடம் அமைக்க அறிவுறுத்தியுள்ளேன்.
அரசு அனைத்து கல்வி நிலையங்களையும் போதிய வசதிகளோடு அமைத்துத்தர வேண்டும். இதில் தனியார் பங்களிப்பும் இருந்தால் நல்லது. அரசு பள்ளிகளை மேம்படுத்த புதுவையை சேர்ந்த தொழிலதிபர்கள் முன்வந்தால் நன்றாக இருக்கும். சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டு வந்துள்ளோம். டிஜிட்டல் வகுப்பறை ஏற்படுத்த போகிறோம். இவற்றை முன்பே இருந்த ஆட்சியாளர்கள் சரி செய்திருக்க வேண்டும். போதிய வசதிகள் இல்லாதது வருத்தம் தரக்கூடியது தான். இருப்பினும் அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் செய்துதர தனி கவனம் செலுத்தவுள்ளோம்.
விரைவாக சுப்பிரமணிய பாரதியார் பள்ளியை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தால் புதுவையில் கல்வி புரட்சி ஏற்படும். சி.பி.எஸ்.இ. பாடத்தில் தமிழ் நிச்சயம் இருக்கும். இந்த பாடத்திட்டம் தேசிய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும். 75 பள்ளிகளை பார்க்க வேண்டும் என கருதி 50 பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன். அதில் உள்ள குறைபாடுகளை நான் கூறினேன், அதை சரிசெய்துள்ளனர். இது போதாது. வகுப்பறையில் மாணவர்கள் தரையில் அமர்ந்து சாப்பிடுவது குறித்து கூறினர். அந்த குறை உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கனவு கண்டு வருகிறோம். அதற்கேற்ப கல்வித்துறையை மேம் படுத்த வேண்டும். தற்போதைய நிலை கவலையளிக்கக் கூடியதுதான், வருத்தம் தெரிவிப்பதில் அர்த்தமில்லை. கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மழை காலத்தில் தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற் கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. புதுவை அரசு மழைக்கால நோய்களை தடுக்க தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது. மழை பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக கவர்னர் குறித்து தி.மு.க.,வின் முரசொலியில் வெளியான கருத்து, நடிகர் விஜய் மாணவர்களுக்கு பரிசு வழங்கியது தொடர்பான கேள்விகளுக்கு கவர்னர் தமிழிசை பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டு கிளம்பிச் சென்றார். இதன்பின் சுப்பிரமணிய பாரதியார் பள்ளியையும் கவர்னர் தமிழிசை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.