புதுச்சேரி மாநிலத்தில் அரசுத் துறைகளில் 5 பணியிடங்களுக்கான தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, புதுச்சேரி தேர்வுத் துறை கட்டுப்பாட்டாளரும், சார்புச் செயலருமான ஜெய்சங்கா் விடுத்துள்ள அறிவிப்பில், புதுவை மாநில அரசின் நில அளவை மற்றும் ஆவணத் துறையில் காலியாக உள்ள கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு வரும் அக்டோபர் 8-ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.
மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் இயக்குநர் அலுவலகம் மூலம் நிரப்பப்படும் அறுவைச் சிகிச்சைப் பிரிவு உதவியாளர் பணிக்கான தேர்வு அக்டோபா் 18 -ஆம் தேதி பகலில் நடைபெறவுள்ளது.
காவல் துறையில் ஓட்டுநர் பணி நிலை-3 பதவிக்கு அக்டோபா் 15- ஆம் தேதி பிற்பகலில் எழுத்துத் தேர்வும், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் கள மேற்பார்வையாளா் பணிக்கு அக்டோபர் 22 -ஆம் தேதி பகலிலும் தேர்வு நடத்தப்படவுள்ளது.
மேலும், போக்குவரத்துத் துறையில் அமலாக்க உதவியாளர் பணிக்கு அக்டோபர் 22-ஆம் தேதி தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வுகளுக்கான தேர்வறை அனுமதிச்சீட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“