/indian-express-tamil/media/media_files/2025/06/19/nurses-2-2025-06-19-06-07-57.jpg)
புதுச்சேரி, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்த கல்லூரியின் இயக்குநர் டாக்டர் உதயசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செவிலியர் அதிகாரி
கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 226 செவிலியர் அதிகாரி (குரூப்-பி) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மற்றும் குடியிருப்பவர்களில் தகுதியான இந்திய குடிமகன்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
செவிலியர் அதிகாரி பணிகளில் பொதுப் பிரிவு - 90, இ.டபிள்யூ.எஸ் - 22, எம்.பி.சி - 40, ஓ.பி.சி - 26, இ.பி.சி - 4, பி.சி.எம் - 5, எஸ்.சி.- 35, எஸ்.டி - 2, பி.டி - 2 என மொத்தமாக 226 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் உள் ஒதுக்கீடாக மாற்றுத்திறனாளிகளுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி நர்சிங் அல்லது டிப்ளமோ இன் ஜெனரல் நர்சிங் மிட்வைஃபரி அல்லது இதற்கு சமமான படிப்பு படித்து, ஏதேனும் ஒரு மாநில நர்சிங் கவுன்சலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும். கொரோனா பணியில் ஈடுபட்ட விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு மற்றும் ஊக்க மதிப்பெண்களில் பெற்ற மதிப்பெண்களுக்கு வெயிட்டேஜ் கொடுக்கப்படும்.
இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொது மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் எம்.பி.சி., ஓ.பி.சி., இ.பி.சி., பி.சி.எம்., பி.டி. பிரிவினருக்கு ரூ.250, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.125 ஆகும். விண்ணப்பக் கட்டணத்தை இயக்குநர், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி என்ற பெயரில் வரைவோலையோக எடுத்து அனுப்ப வேண்டும்.
கல்லூரி இணையதளத்தில் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அடுத்த மாதம் (நவம்பர்) 6 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இயக்குநர், இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், வழுதாவூர் சாலை, கதிர்காமம், புதுச்சேரி - 605009 என்ற முகவரியில் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை கல்லூரி இணையதளத்தில் https://igmcri.edu.in தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.