புதுச்சேரி மாநிலத்தில் 1,635 குரூப் ஏ, 10,474 குரூப் பி, 19,363 குரூப் சி பணியிடங்கள் உட்பட 31, 739 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 26,958 ஊழியர்கள் பணியில் உள்ளனர். மாநிலத்தில் ஏ மற்றும் பி குரூப் பதவிகள் மத்திய தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
இதனால் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகிறது. எனவே புதுவையில் தனி தேர்வாணையம் அமைக்க வேண்டும் என நீண்டகால கோரிக்கை உள்ளது. சட்டசபையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய தேர்வாணையத்திற்கு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
இதையும் படியுங்கள்: புதுச்சேரி அரசின் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: விண்ணப்பிக்க அழைப்பு
இந்த நிலையில் புதுவையில் துணை பணியாளர் தேர்வு வாரியம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இதற்கான கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையில் போதிய தேர்வுப் பணியாளர்கள் இல்லாததால் காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே டெல்லியை பின்பற்றி புதுவையில் துணை பணியாளர் தேர்வு வாரியம் அமைக்க அரசு திட்டமிட்டு பணிகளை வேகப்படுத்தியுள்ளது. டெல்லியில் 1996 ஆம் ஆண்டில் துணை பணியாளர் தேர்வு வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ஒரு சேர்மன், ஒரு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஒரு உறுப்பினர், 5 துணை செயலர்கள் இதை நிர்வகிக்கின்றனர். இதன் மூலம் அனைத்து அரசு பணியிடங்களும் வெளிப்படையாக தேர்வு செய்யப் படுகிறது. பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படுகின்றன.
புதுவையை பொருத்தவரை குரூப் ஏ பணியிடங்களை துணை தேர்வு வாரியம் மூலம் நிரப்ப முடியாது. இந்த பதவிகளை மத்திய தேர்வாணையம் தான் நிரப்பும். ஆனால் குரூப் பி பணியிடத்தில் அரசு பதிவு பெறாத அரசு ஊழியர் பணியிடங்கள் மற்றும் சி பிரிவு பணியிடங்களை விரைவாக நிரப்பிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil