பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
அரசு பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாகம் சம்பந்தமான செயல்பாடுகள், பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும், எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக விளங்கவும், ஐ.ஏ.எஸ் போன்ற மேல்படிப்புகளை படிக்க முன்னுதாரணமாக அமையவும் பள்ளி மாணவர்கள் 'ஒரு நாள் மாவட்ட ஆட்சியர்' ஆக பணியாற்ற வாய்ப்பு தரப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக காரைக்கால் மேடு அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் பி. லித்யா ஸ்ரீ என்கிற மாணவி முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக அனைத்து பள்ளிகளும் மாணவ - மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுள்ளது. அந்தப் பயிற்சியின் அடிப்படையில் நேர்மை, தன்னம்பிக்கை, சிறந்த கல்வி மற்றும் பேச்சாற்றல் ஆகியவை குறித்து தேர்வு நடைபெற்று சிறந்த மாணவியாக அவர் கல்வித்துறையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று ஒரு நாள் முழுவதும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முனைவர் மணிகண்டனுடன் மாவட்ட ஆட்சியராக இணைந்து மாவட்ட ஆட்சியரின் பணிகளையும் ஆட்சியரின் மற்ற வேலைகளையும் உடன் இருந்து கற்றுக்கொண்டு செயல்பட்டார். மேலும் ஒரு நாள் மாவட்ட ஆட்சியரின் பணிகளை தெரிந்து கொண்டு தனது அனுபவங்களை சக மாணவ மாணவிகளுடன் பகிர்ந்து கொள்ளவும் அவர்களுக்கு உதவும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். குறிப்பாக இது போன்ற முயற்சி இவர்களின் வாழ்க்கை மற்றும் கல்வியை மேம்படுத்த உதவும் எனவும் கூறினார்
ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணிபுரியும் மாணவியுடன் மாவட்ட ஆட்சியர் நலன் குளத்தை சுற்றி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், இங்கே பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தை முறைப்படுத்த வேண்டும் எனவும் தரமற்ற உணவுகள் வழங்குவதை தடுப்பதற்கு நிரந்தர முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அபோது, நலன் குலத்தை சுற்றியுள்ள கடைகளுக்கு நிரந்தர இடம் ஒதுக்கி தரும்படியும் கோயில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் கோரிக்கை வைத்தார்.
/indian-express-tamil/media/post_attachments/c2e831ab-7fe.jpg)
மேல்நிலைக் கல்வித் துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா, ஆட்சியரின் செயலர் பொன்பாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கண்காணிப்பாளர் பாலு (எ) பக்கிரிசாமி, பள்ளி ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோர்கள் ஊர் பஞ்சாயத்தார்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் .
மாலை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் மாணவி ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணிகளை கற்றுக் கொண்டார். நாள் முழுவதும் மாவட்ட ஆட்சியர் உடன் பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“