புதுச்சேரியில் திரு.வி.க அரசு பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு; மாணவர்கள், எம்.எல்.ஏ ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி திரு.வி.க அரசுப் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு; மாணவர்கள், எம்.எல்.ஏ போராட்டம் நடத்தியதை அடுத்த அதே இடத்தில் செயல்படும் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பு
புதுச்சேரி திரு.வி.க அரசுப் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு; மாணவர்கள், எம்.எல்.ஏ போராட்டம் நடத்தியதை அடுத்த அதே இடத்தில் செயல்படும் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பு
புதுச்சேரியில் திரு.வி.க அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை எந்த முன்னறிவிப்பு இல்லாமல் இடமாற்றம் செய்யப்படுவதாக கல்வித்துறை மற்றும் ஆசிரியர்கள் அறிவித்ததால், முன்னாள் மாணவர்கள் மற்றும் எம்.எல்.ஏ பள்ளிக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Advertisment
புதுச்சேரி உருளையான்பேட்டை தொகுதியில் சவுரி ராயலு தெருவில் திரு.வி.க அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி பள்ளி இயங்குகிறது. இப்பள்ளி மிகவும் பழமையான பள்ளி. இத்தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ நேருவும் இப்பள்ளியில் தான் படித்தார். கோடை விடுமுறைக்கு பின்பு வழக்கம் போல் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வந்து விட்டனர். ஆனால் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், இடப்பற்றாக்குறை காரணமாக பள்ளி இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவித்தனர். மேலும் ஸ்மார்ட் சிட்டி விரிவுபடுத்தும் பணியில் இப்பள்ளி இருப்பதால் இப்பள்ளி வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது, ஸ்மார்ட் சிட்டி மூலம் இப்பள்ளியை சீரமைக்கப் போகிறோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மாணவர்கள் புத்தகப் பை மற்றும் புது யூனிஃபார்ம் உடன் பள்ளிக்கு வெளியில் நின்றனர். மேலும் ஆசிரியர்களின் தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்களும் உறவினர்களும், இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ நேரு என்கிற குப்புசாமியிடம் தகவல் தெரிவித்தனர். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் அரசு அதிகாரிகளாகவும் பல்வேறு பொறுப்புகளிலும் உள்ளனர். அந்த முன்னாள் மாணவர்களில் ஒரு சிலர் பள்ளிக்கு முன்பு ஒன்று கூடி பள்ளிக்கு முன்பு புதுவை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அப்பொழுது தொகுதி எம்.எல்.ஏ நேருவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டார்.
இது பற்றி எம்.எல்.ஏ நேரு கூறியதாவது, புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட சவரிராயுலு வீதியில் அமைந்துள்ள திரு.வி.க அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்களை திடீரென வேறு பள்ளிக்கு மாற்றுவதாக பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதனை அறிந்த திரு.வி.க பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திரு.வி.க பள்ளியினை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு (எ) குப்புசாமி, திரு.வி.க பள்ளிக்கு விரைந்து சென்று இதுபற்றி, அங்கு இருந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றுவது சம்பந்தமாக சட்டமன்ற உறுப்பினருக்கே தகவல் தெரிவிக்கவில்லை என அதிகாரிகளிடம் வருத்தம் தெரிவித்தார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் நேருவின் பேச்சு வார்த்தைக்கு இணங்கி, திரு.வி.க பள்ளி தற்போதைக்கு உள்ள இடத்திலே செயல்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இவ்வாறு அவர் கூறினார்
முதல் நாளே பள்ளிக்கு வந்த மாணவர்கள் மன சங்கடத்துடன் பள்ளிக்குச் சென்றது, பெற்றோர்கள் மத்தியில் மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil