scorecardresearch

புதுச்சேரி காவலர் உடற்தகுதி தேர்வு 13-ம் தேதி முதல் ஆரம்பம்; ஐ.ஜி அறிவிப்பு

ஏற்கனவே உள்ள பாஸ்வேர்டை பயன்படுத்தி இணையதளத்தில் நாளை முதல் காவலர் பணி உடற்தகுதி தேர்வுக்கான அனுமதி கடிதத்தை விண்ணப்பித்தோர் பெறலாம் – புதுச்சேரி ஐ.ஜி

police
பிரதிநிதித்துவ படம்

புதுச்சேரி காவல்துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடத்தப்பட உள்ளது. தற்போது 256 போலீசார், 26 டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 173 பேர் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். டிரைவர் பணிக்கு 881 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு வருகிற மார்ச் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தகவலை போலீஸ் ஐ.ஜி சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, காவலர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் 14 ஆயிரத்து 45 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. 28 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல டிரைவர் பணியிடங்களில் 877 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. 4 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான காரணம் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு; 560 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

ஏற்கனவே உள்ள பாஸ்வேர்டை பயன்படுத்தி இணையதளத்தில் நாளை முதல் உடற்தகுதி தேர்வுக்கான அனுமதி கடிதத்தை விண்ணப்பித்தோர் பெறலாம். வரும் 13ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு கோரிமேடு மைதானத்தில் நடக்கிறது.

ஒரு நாளைக்கு 500 பேருக்கு தகுதி தேர்வு நடத்த உள்ளோம். காலை 6 மணிக்கு தேர்வு தொடங்கும். உடல் தகுதி தேர்வுக்கு டிஜிட்டல் முறையில் நடத்தப்படும். நீளம், உயரம் தாண்டுதலில் நிபுணர்கள் தேர்வு நடத்துவர். 31ம் தேதி டிரைவர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெறும்.

காவலர், டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்தால் 2 தேர்விலும் தனித்தனியாக வந்து பங்கேற்க வேண்டும். தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறும். காவலர் பணிக்கு பிளஸ் 2 தகுதி என்றாலும், முதுகலைபட்டம், பொறியியல் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

சமீபத்தில் தற்கொலை செய்த 3 காவலர்களில் 2 பேர் உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்துகொண்டனர். அவர்களின் தற்கொலைக்கு மன அழுத்தமோ, வேலை பளுவோ காரணமில்லை. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட காவலர்கள் தங்கள் உயரதிகாரிகளை நேரடியாக சந்தித்து விடுப்பு கேட்கலாம். இடமாற்றம் கோரலாம்.

ஆண்டுக்கு 300 பேர் புதுவையில் தற்கொலை செய்கின்றனர். இதில் பல துறைகளை சேர்ந்தவர்களும் அடங்குவர். காவலர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா, விளையாட்டில் ஈடுபட வேண்டும். இதை காவல்துறை ஊக்கப்படுத்தி வருகிறது. பணி சுமையை குறைக்க புதிதாக பயிற்சி பெற்று வரும் காவலர்கள் விரைவில் பணி அமர்த்தப்படுவார்கள்.

போலீசார் இரவில் ரோந்து பணியில் இருக்க வேண்டும் என காவல்துறை அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இரவில் ஒரு போலீஸ் சூப்பிரெண்டு தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் இருப்பர். ரோந்து பணியில் முறையாக ஈடுபடுவதாக தகவல் வந்துள்ளது.

போலீசார் ரோந்து வராவிட்டால் தகவல் தெரிவிக்கலாம். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்துவதன் மூலமாகத்தான் விபத்துகளை தடுக்க முடியும். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

உயிரை துச்சமாக மதிக்காமல் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். இன்று முதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உடனடி அபராதம் வசூலிக்க இ-சலான் முறை நடைமுறைக்கு வருகிறது. இதன்படி விதி மீறுவோர் எத்தனை முறை விதி மீறியுள்ளனர் என தகவல் வரும். அதன்பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். போதைப்பொருட்களை கட்டுப்படுத்த காவல்துறை எடுத்த நடவடிக்கையால் பெருமளவு போதைப்பொருள் நடமாட்டம் புதுவையில் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர்: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Puducherry police recruitment physical exam starts march 13