இந்திய ரயில்வேயில் குரூப் டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியான பின்னும், தேர்வுகள் குறித்த தேதி உள்ளிட்ட விபரங்கள் வெளியாகாமல் உள்ள நிகழ்வு, லட்சக்கணக்கான தேர்வர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 1 லட்சத்திற்கு (1,03,769) மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை, கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 1,15,67,248 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பணியிடங்களுக்கான முதல்கட்ட கணினி அடிப்படையிலான தேர்வு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்த தேர்வுக்கான அறிவிக்கை மட்டுமே வெளியாகியுள்ளதே தவிர, மற்ற விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
ரயில்வே விளக்கம் : ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு (TRB) இந்த குரூப் டி பிரிவு பணியிடங்களுக்கான தேர்வை ரயில்வே ரெக்ரூட்மென்ட் செல் (RRC) என்ற அமைப்பின் மூலம் நடத்திவந்தது. தற்போது அதிக பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளதால், தேர்வு பணிகளை முறைப்படுத்த மேலும் ஒரு அமைப்பை ஏற்படுத்த TRB திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் TRB ஈடுபட்டுள்ளது. இந்த தேர்வு அமைப்பை தேர்ந்தெடுக்க காலதாமதம் ஆவதாலேயே, இந்த தேர்வுகள் நடத்த தாமதம் ஆகிக்கொண்டிருப்பதாக ரயில்வே துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவரிடம், இந்த தேர்வு, இந்தாண்டிலேயே நடத்தப்படுமா அல்லது அடுத்த ஆண்டில் நடைபெறுமா என்று கேட்டதற்கு, தேர்வு அமைப்பு இறுதி செய்தவுடன் தேர்வுகள் நடத்தப்படும் என்று பதிலளித்தார்.
TRB கடந்த இரண்டு ஆண்டுகளில் 7 தேர்வுகளை நடத்தியுள்ளது. இதில் அதிக பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வாக, தற்போது அறிவிக்கப்பட்ட தேர்வே உள்ளது. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிக்கை மட்டுமே தற்போதைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நாள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ரயில்வே மறுப்பு : பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. உரிய நேரத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.