/indian-express-tamil/media/media_files/2025/03/19/cmmhTebyoFvxfzRfxKCW.jpg)
புகைப்படம் – மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எக்ஸ் பக்கம்
அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கான ரயில்வே தேர்வாணையத்தின் இரண்டாம் கட்ட தேர்வு திடீரென்று ரத்து செய்யப்பட்டதால், தேர்வு எழுதுவதற்காக தெலுங்கானா மாநிலம் சென்ற தமிழக தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய ரயில்வே துறையில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கான தேர்வுச் செயல்முறை நடந்து வருகிறது. இதில் முதல் கட்ட கணினி வழித் தேர்வுகள் நடந்து முடிந்து, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, முதல் கட்ட தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட கணினி வழித் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. இந்த இரண்டாம் கட்டத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலே பணி நியமனம் வழங்கப்படும்.
இந்த இரண்டாம் கட்ட தேர்வுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல தேர்வர்களுக்கு 1000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தெலங்கானா மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இது தேர்வர்களை அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் தேர்வு மையங்களை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இதேபோல், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மதுரை சு.வெங்கடேசன் உள்ளிட்டோரும் தேர்வு மையங்களை தமிழகத்தில் ஒதுக்குமாறு வலியுறுத்தினர். ஆனால் அனைத்து நடைமுறைகளும் விதிமுறைகள்படி நடப்பதாகக் கூறி ரயில்வே தேர்வாணையம், தமிழக தேர்வர்களுக்கு தேர்வு மையங்களை தமிழகத்தில் ஒதுக்க மறுத்துவிட்டது.
இருப்பினும் இரண்டாம் கட்ட தேர்வு முக்கிய தேர்வு என்பதால், அதாவது இந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவர்களுக்கு கிடைக்கும் என்பதால், தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்கள் 1000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தெலங்கானா தேர்வு மையங்களுக்குச் சென்றார்.
தேர்வு இன்று (19.03.2025) நடைபெற இருந்த நிலையில், திடீரென தொழில்நுட்ப காரணங்களால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வு குறித்த அறிவிப்புகள் தொடர்பாக ரயில்வே தேர்வாணைய இணையதளத்தை பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு ரத்து என்பதை முன்கூட்டியே சொல்லாமல் திடீரென என சொன்னால் என்ன அர்த்தம் என மாணவர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் பல ஆயிரம் கி.மீ. பயணம் செய்து, ஏற்கெனவே செய்யும் பணிகளுக்கு விடுப்பு பெற்று வந்திருக்கும் போது இப்படி அலைக்கழிப்பதா என மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்தநிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாத ரயில்வே துறை நாட்டில் இளநிலை நீட், யு.ஜி.சி நெட் தேர்வு வினாத்தாள் கசிவால் ஏறத்தாழ 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பதிவுசெய்தார். வினாத்தாள் கசிவிற்கு பிறகு, தற்போது உதவி லோகோ பைலட் தேர்வை நடத்தும் ஆர்.ஆர்.பி.,யானது, தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்ததிருந்த போதும் மிகுந்த சிரமத்துடன் இன்று தேர்வு எழுத சென்றவர்களை அலைக்கழித்துள்ளது ரயில்வே துறை.
எதிர்கால கனவுடன் தேர்வு எழுதச் சென்ற இளைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை சிதைக்கின்றது ஒன்றிய ரயில்வே துறை. இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மனவுளைச்சலுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். இவ்வாறு செல்வப்பெருந்தகை பதிவிட்டுள்ளார்.
இதேபோல் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரயில்வே தேர்வு வாரியத் தேர்வு ரத்து. 1000 கிலோமீட்டருக்கு மேல் பயணப்பட்டு தேர்வு மையத்திற்கு சென்றுள்ள தேர்வர்கள் அதிர்ச்சி. போதுமான முன்னெச்சரிக்கை செய்திடாமல் இருந்தது ரயில்வே தேர்வு வாரியத்தின் அலட்சியத்தின் உட்சம். இந்த செயல் RRB யின் நம்பிக்கையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. பிற மாநிலங்களுக்கு தேர்வு மையம் வரை சென்று திரும்பிய தேர்வர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலிப் பணியிடங்களுக்கான CBT தேர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வெழுதுவோருக்கு 1500 கிலோமீட்டருக்கு அப்பால் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அதை மாற்ற வேண்டுமெனக் கோரி தொடர்ச்சியான தலையீடுகளை மேற்கொண்டோம். ஆனால் உடனடியாக 6000 தேர்வர்களுக்கு தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் தேர்வு செய்ய முடியவில்லை என பதில் அளித்தது.
இத்தனை தடைகளையும் மீறி இன்றைய தினம் 1000 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து தமிழ்நாட்டு தேர்வகள் தேர்வெழுத சென்றனர். ஆனால் இன்று தொழில்நுட்ப காரணங்களால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தேர்வெழுத சென்றவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து தேர்வெழுத வருவோருக்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளைக் கூட முன்னெச்சரிக்கையாக செய்திடாமல் இருப்பது ரயில்வே தேர்வு வாரியத்தின் அலட்சியத்தின் உட்சம். இந்த தொழில்நுட்பக் கோளாறு குறித்து முறையான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய ஒரு தேர்வு தேர்வர்களுக்கான குறைந்தபட்ச வாழ்வியல் தேவையையும் சூறையாடுகிறது. இது ரயில்வே தேர்வு வாரியத்தின் மீதான நம்பிக்கையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதனை ஒரு போதும் ஏற்கமுடியாது. பிற மாநிலங்களுக்கு தேர்வு மையம் வரை சென்று திரும்பிய தேர்வர்கள் செலவு செய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக ரயில்வே வாரியம் வழங்க வேண்டும்.
எனவே இதன் பின்னர் அறிவிக்கப்பட உள்ள தேர்வையாவது தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் அமைத்து நடத்தப்படுவதை ரயில்வே அமைச்சகமும், ரயில்வே தேர்வு வாரியமும் உறுதிபடுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.