Railway Recruitment Exams from December, 15th, 2020: ரயில்வே துறையில் காலியாக உள்ள ஒரு லட்சத்து நான்காயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு இம்மாதம் பதினைந்தாம் தேதி முதல் 3 கட்டங்களாக தேர்வு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
"இந்திய ரயில்வே, தனது 21 ரயில்வே வாரியங்கள் மூலம் நடத்தும் மிகப் பெரிய அளவிலான ஆட்கள் தேர்வு, டிசம்பர் 15ம் தேதி முதல் 3 கட்டங்களாக நடக்கிறது. இதன் மூலம் ரயில்வே துறையின் பல பிரிவுகளில் 1.4 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு 2.44 கோடிக்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் தேர்வெழுதவுள்ளனர். இந்தத் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன.
முதல் கட்டத் தேர்வு (CEN 03/2019 ( Isolated and Ministerial categories) டிசம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை நடக்கிறது. 2ம் கட்ட ஆட்கள் தேர்வு (CEN 01/2019 (NTPC categories) டிசம்பர் 28ம் தேதி முதல் 2021ம் ஆண்டு மார்ச் வரை நடக்கிறது. 3ம் கட்ட தேர்வு (CEN No. RRC- 01/2019 (Level-1) 2021 ஏப்ரல் முதல் 2021 ஜூன் வரை நடக்கிறது.
இது குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக இ-மெயில், எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்கள் ரயில்வே தேர்வு வாரிய இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.
என்று அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.