Ramanathapuram News in Tamil: ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற சனிக்கிழமை நடக்கவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற சனிக்கிழமை (மார்ச் 18ம் தேதி ) ராமநாதபுரம் மாவட்டம் லாந்தை, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன், சீர்மரபினர் நலன் மற்றும் கதர், கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை தெரிவு செய்ய இருக்கின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளும், முதுகலை, இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கான பணியினை தாங்களே தேர்வு செய்வதற்கான இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது ramnademployment2020@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 04567 230160 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தம் செய்யப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தைக்கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, வேலைநாடுநர்கள் தங்களது முழு பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இத்தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil