* குறிப்பாக, இந்துக்கள் பழிவாங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அல்லது முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் இருந்தது போல் இந்தியா இந்துக்களுக்கான நாடாக மாற வேண்டும் என்று விரும்புபவர்களால் அவர் (காந்தி) வெறுக்கப்பட்டார்.
* இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கான அவரது உறுதியான நாட்டம் இந்து தீவிரவாதிகளை மிகவும் தூண்டியது, அவர்கள் காந்திஜியை கொல்ல பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள்: முகலாய சகாப்தம், டெல்லி சுல்தானியம், எமர்ஜென்சி, குஜராத் கலவரம்; NCERT புத்தகங்களில் நீக்கம்
* காந்திஜியின் மரணம் நாட்டில் உள்ள வகுப்புவாத சூழ்நிலையில் கிட்டத்தட்ட மாயாஜால விளைவை ஏற்படுத்தியது... வகுப்புவாத வெறுப்பை பரப்பும் அமைப்புகளை இந்திய அரசு ஒடுக்கியது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) போன்ற அமைப்புகள் சில காலம் தடை செய்யப்பட்டன.
15 ஆண்டுகளுக்கும் மேலாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கற்பிக்கப்படும் இந்த வாக்கியங்கள் இப்போது NCERT பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
காந்தியின் கொலையாளி நாதுராம் கோட்சேவை “புனேவைச் சேர்ந்த ஒரு பிராமணர்” என்றும், காந்திஜியை ‘முஸ்லிம்களை திருப்திப்படுத்துபவர்’ என்று கண்டித்த தீவிரவாத இந்து பத்திரிகையின் ஆசிரியர்” என்றும் 12 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியங்கள் நீக்கப்பட்டுள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட "திருத்தப்பட்ட (rationalized) உள்ளடக்கத்தின் பட்டியலில்" மேற்கண்ட நீக்குதல்கள் இடம்பெறவில்லை.
இருப்பினும், சமீபத்தில் சந்தைக்கு வந்த புதிய பாடப்புத்தகங்களில் (திருத்தப்பட்ட உள்ளடக்கத்துடன்) மேற்கண்ட வாக்கியங்கள் மற்றும் குறிப்புகள் இல்லை என்பது மறுபதிப்பு செய்யப்பட்ட புத்தகங்களை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு, கோவிட்-19 இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் கற்றலில் “விரைவான மீட்சியை” அடைய உதவுவதற்காக, பாடத்திட்டச் சுமையை மேலும் குறைக்க, அனைத்துப் பாடங்களுக்கான பாடப்புத்தகங்களை NCERT முறைப்படுத்தியது (குறைத்தது). கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு சிறு புத்தகத்தின் மூலம் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன, மேலும் அனைத்து பள்ளிகளுடனும் முறையாக பகிரப்பட்டது. கடந்த ஆண்டு நேரப் பற்றாக்குறையால் பாடப்புத்தகங்கள் (திருத்தப்பட்ட உள்ளடக்கத்துடன்) மறுபதிப்பு செய்யப்படவில்லை. எவ்வாறாயினும், 2023-24 புதிய கல்வியாண்டில் புதிய புத்தகங்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.
மகாத்மா காந்தியின் படுகொலை தொடர்பான மாற்றங்கள் ஜூன் 2022 இல் வெளியிடப்பட்ட NCERT இன் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் ஏன் இடம்பெறவில்லை, ஆனால் மறுபதிப்பு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களில் நேரடியாக அறிமுகப்படுத்தப்பட்டது ஏன் என்று கேட்டபோது, NCERT இயக்குனர் DS சக்லானி இந்த முறை "புதிதாக எதுவும் இல்லை" என்று வலியுறுத்தினார். “திருத்தங்கள் கடந்த ஆண்டு நடந்தது. தற்போது நாங்கள் புதிதாக எதையும் செய்யவில்லை, ”என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். அவரது சக ஊழியரும் NCERTயின் மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான AP பெஹெரா, “மேற்பார்வை காரணமாக சில பகுதிகள் வெளியேறியிருக்கலாம் ஆனால் இந்த ஆண்டு புதிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இவை அனைத்தும் கடந்த ஆண்டு நடந்தது,” என்று கூறினார்.
ஜூன் 2022 இல் வெளியிடப்பட்ட NCERT இன் "திருத்தப்பட்ட உள்ளடக்கத்தின் பட்டியலில்" இல்லாமல், இந்த ஆண்டு மறுபதிப்பு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சில வெளிப்படையான மாற்றங்கள் இங்கே:
* NCERT பாடப்புத்தகங்களில் குஜராத் கலவரம் பற்றிய மூன்றாவது மற்றும் கடைசி குறிப்பு, 11 ஆம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகமான ‘சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்’ என்ற தலைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வகுப்பு, மதம் மற்றும் இனங்கள் எவ்வாறு அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளைப் பிரிப்பதற்கு வழிவகுக்கும் என்பதைப் பற்றி பேசும் ஒரு பத்தியை NCERT நீக்கியுள்ளது, பின்னர் 2002 இல் குஜராத்தில் நடந்த வகுப்புவாத வன்முறையை மேற்கோள் காட்டி வகுப்புவாத வன்முறை எவ்வாறு கெட்டோமயமாக்கலை (சேரி அல்லது சிறுபான்மையினர் வாழும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி) மேலும் அதிகப்படுத்துகிறது என்பதை விளக்குகிறது.
“நகரங்களில் மக்கள் எங்கே, எப்படி வாழ்வார்கள் என்பது சமூக-கலாச்சார அடையாளங்கள் மூலமாகவும் வடிகட்டப்படும் கேள்வி. உலகெங்கிலும் உள்ள நகரங்களில் குடியிருப்பு பகுதிகள் எப்போதும் வர்க்கம், சாதி, இனம், மதம் மற்றும் இது போன்ற பிற காரணிகளால் பிரிக்கப்படுகின்றன. இத்தகைய சமூக அடையாளங்களுக்கு இடையே ஏற்படும் பதட்டங்கள் பிரிவினை முறைகளையும் அதற்கான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியாவில், மதச் சமூகங்களுக்கு இடையேயான வகுப்புவாத பதட்டங்கள், பொதுவாக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள், கலப்பு குடியிருப்பு பகுதிகளை ஒற்றைச் சமூகமாக மாற்றுகிறது. இது வகுப்புவாத வன்முறை வெடிக்கும் போதெல்லாம் அதற்கு ஒரு குறிப்பிட்ட இடஞ்சார்ந்த வடிவத்தை அளிக்கிறது, இது மீண்டும் 'கெட்டோமயமாக்கல்' செயல்முறையை மேம்படுத்துகிறது. இது இந்தியாவின் பல நகரங்களில் நடந்துள்ளது, 2002 கலவரத்தைத் தொடர்ந்து குஜராத்தில் சமீபத்தில் நடந்துள்ளது,” என நீக்கப்பட்ட பத்தி கூறுகிறது.
மேற்குறிப்பிட்ட பத்தி நீக்கப்பட்டதன் மூலம், 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான அனைத்து NCERT சமூக அறிவியல் பாடப்புத்தகங்களிலிருந்தும் குஜராத் கலவரம் பற்றிய அனைத்து குறிப்புகளும் அகற்றப்பட்டுள்ளன.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் கடைசி அத்தியாயமான 'சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் அரசியல்' மற்றும் 12 ஆம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகமான 'இந்தியன் சொசைட்டி' என்ற தலைப்பில் குஜராத் கலவரங்கள் பற்றிய இரண்டு குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட உள்ளடக்கத்தில் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
* 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் முதல் அத்தியாயமான ‘சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் அரசியல்’ என்ற பகுதியில், குறிப்பாக இந்து தீவிரவாதிகள் மகாத்மா காந்தியை எப்படிப் வெறுத்தார்கள் மற்றும் அவரைக் கொல்ல பல முயற்சிகளை மேற்கொண்டனர் என்பதற்கான வாக்கியங்களை NCERT நீக்கியுள்ளது. இது ‘மகாத்மா காந்தியின் தியாகம்’ என்ற துணைத் தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
”அவர் (காந்தி) குறிப்பாக இந்துக்கள் பழிவாங்க வேண்டும் என்று விரும்புவோர்கள் அல்லது முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் இருந்ததைப் போல இந்தியா இந்துக்களுக்கான நாடாக மாற விரும்புபவர்களால் வெறுக்கப்பட்டார். முஸ்லீம்கள் மற்றும் பாகிஸ்தானின் நலன்களுக்காக காந்திஜி செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் என்று காந்திஜி நினைத்தார். இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக மாற்றும் எந்த முயற்சியும் இந்தியாவை அழித்துவிடும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கான அவரது உறுதியான நாட்டம் இந்து தீவிரவாதிகளை மிகவும் தூண்டியது, அவர்கள் காந்திஜியைக் கொல்ல பல முயற்சிகளை மேற்கொண்டனர்” என்று நீக்கப்பட்ட பத்தியில் கூறப்பட்டுள்ளது.
காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் மீதான அரசாங்கத்தின் தடை பற்றிய குறிப்பையும் NCERT கைவிட்டுள்ளது.
“காந்திஜியின் மரணம் நாட்டின் வகுப்புவாத சூழ்நிலையில் கிட்டத்தட்ட மாயாஜால விளைவை ஏற்படுத்தியது. பிரிவினை தொடர்பான கோபமும் வன்முறையும் திடீரென தணிந்தது. மதவெறியை பரப்பும் அமைப்புகள் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் போன்ற அமைப்புகள் சில காலம் தடை செய்யப்பட்டன. வகுப்புவாத அரசியல் அதன் ஈர்ப்பை இழக்கத் தொடங்கியது,” என்று நீக்கப்பட்ட பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ‘மகாத்மா காந்தியின் தியாகம்’ என்ற துணைத் தலைப்பின் கீழ் மீதமுள்ள உள்ளடக்கம், ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்து-முஸ்லிம் கலவரங்களால் பாதிக்கப்பட்ட கொல்கத்தாவுக்கு காந்தியின் வருகையையும், இந்துக்களையும் முஸ்லிம்களையும் வன்முறையைக் கைவிட அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் குறிப்பிடுகிறது. இது அவரது படுகொலையையும் சுருக்கமாக விவரிக்கிறது.
"இறுதியாக, ஜனவரி 30, 1948 அன்று, அத்தகைய தீவிரவாதியான நாதுராம் விநாயக் கோட்சே, டெல்லியில் காந்திஜியின் மாலைப் பிரார்த்தனையின் போது அவரிடம் சென்று மூன்று தோட்டாக்களை அவர் மீது சுட்டார், அவர் உடனடியாக கொல்லப்பட்டார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* 12ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் 'இந்திய வரலாற்றின் கருப்பொருள்கள் பகுதி III' என்ற தலைப்பில், கோட்சே பற்றிய "பிராமண" குறிப்பையும், அவர் "ஒரு தீவிரவாத இந்து செய்தித்தாளின் ஆசிரியர்" என்று வாக்கியத்தையும் கவுன்சில் நீக்கியுள்ளது.
"மகாத்மா காந்தியும் தேசியவாத இயக்கமும்" என்ற தலைப்பில் காந்தியின் படுகொலை தொடர்பான பத்தியில், "ஜனவரி 30 மாலை அவரது தினசரி பிரார்த்தனை கூட்டத்தில், காந்திஜி ஒரு இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் சரணடைந்த கொலையாளி, புனேவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே என்ற பிராமணர் ஆவார், அவர் காந்திஜியை 'முஸ்லிம்களை திருப்திப்படுத்துபவர்' என்று கண்டித்த தீவிரவாத இந்து பத்திரிகையின் ஆசிரியர் ஆவார்,” என்று முந்தைய பதிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்போது திருத்தப்பட்ட பத்தியில், “ஜனவரி 30 மாலை அவரது தினசரி பிரார்த்தனை கூட்டத்தில், காந்திஜி ஒரு இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு சரணடைந்த கொலையாளி நாதுராம் கோட்சே,” என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.